தேனி மாவட்டத்தில் மணல் திருட்டு மற்றும் மணல் கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் வரை 162 மணல் திருட்டு கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 180 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவற்றில் மணல் திருட்டு கடத்தலுக்கு பயன்படுத்திய 66 ட்ராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 4 பொக்லைன் இயந்திரங்கள், 76 மாட்டு வண்டிகள், 22 மோட்டார் வாகனங்கள், 9 மூன்று சக்கர வாகனங்கள் என மொத்தம் 186 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறது. மேலும் தொடர்ச்சியாக இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகள், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆகவே மணல் திருட்டு கடத்தலில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. அதுபோல் மணல் திருட்டு கடத்தலுக்கு போலீஸ் அல்லது பிற அரசுதுறையைச் சேர்ந்த அலுவலர்கள் யாரேனும் உடந்தையாக இருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் எச்சரித்துள்ளார்.
மணல் திருட்டால் நீர்வளம் குறைவதாகவும், இனி மணல் வழக்கில் முன்ஜாமீன் கிடையாது எனச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தகுந்தது.