Skip to main content

ஊழலை அம்பலப்படுத்தும் ஊழியர்களுக்கு மிரட்டல்: துணைவேந்தரை நீக்க வேண்டும்! - ராமதாஸ் வலியுறுத்தல்

Published on 26/04/2018 | Edited on 26/04/2018


ஊழலை அம்பலப்படுத்தும் ஊழியர்களுக்கு மிரட்டல், துணைவேந்தரை நீக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் உள்ளிட்டோருக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் வெளியாகி வரும் நிலையில், அதற்குக் காரணமான பல்கலைக்கழக பணியாளர் சங்க நிர்வாகிகள் பழிவாங்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த விஷயத்தில் அநீதிக்கு எதிராகப் போராடும் பணியாளர்களுக்கு மறைமுக மிரட்டல் விடுக்கப்படுகிறது. இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கதாகும்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பேராசிரியர் நிர்மலாதேவி பாலியல் வலை வீசப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை பல்கலைக்கழகத்தின் உயர்பதவிகளில் உள்ளவர்களை நோக்கி நகர்ந்து வருகிறது. கல்லூரி மாணவிகளுக்கு வலைவீசும்படி நிர்மலாதேவியைத் தூண்டியதாக பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகனும், அதிகாரப்பூர்வமற்ற வகையில் அவரது சட்டவிரோத செயல்களுக்கு துணையாக இருந்த ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியும் கைதாகியுள்ளனர். அவர்கள் இந்த விவகாரத்தில் அம்புகள் மட்டுமே. அவர்களை ஏவியவர்கள் யார்? என்ற வினாவுக்குத் தான் இப்போது தான் விடை காண வேண்டியிருக்கிறது. அந்த பணியை காவல்துறைக்கு வைக்காமல், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கை குழுவே மேற்கொண்டு வருகிறது. அவர்களுக்குத் துணையாக மதுரை காமராசர் பல்கலைக்கழக நிர்வாகப் பணியாளர் சங்கமும் இந்த விவகாரம் தொடர்பான ஏராளமான உண்மைகளை விசாரணை அமைப்புகளிடமும், பொது வெளியிலும் வெளியிட்டு வருகின்றனர்.

இதைத் தடுக்கும் வகையில் பல்கலைக்கழகப் பணியாளர்கள் எவரும் போராட்டங்களில் பங்கேற்கவும், பத்திரிகைகளுக்கு பேட்டியளிக்கவும் மதுரைப் பல்கலைக்கழக நிர்வாகம் தடை விதித்திருக்கிறது. இந்தத் தடையை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்கலைக்கழக பதிவாளர் எச்சரித்திருக்கிறார். இது அப்பட்டமான மிரட்டல் என்பதைத் தவிர வேறில்லை. மேலும், பல்கலைக்கழகத்தின் மூத்த துணைப்பதிவாளரும், பல்கலைக்கழக நிர்வாகப் பணியாளர் சங்கத் தலைவருமான முத்தையா, சாத்தூரில் உள்ள உறுப்புக்கல்லூரிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அதேபோல், சங்கத்தின் செயலாளர் முருகன் தேனி மாவட்டத்திலுள்ள உறுப்புக்கல்லூரிக்கு மாற்றப்பட்டிருக்கிறார். பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிரான குரல்களை ஒடுக்குவதற்காகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக் குழுவின் போராட்டத்தில் பாலியல் சர்ச்சை குறித்த ஆதாரங்கள் மட்டுமின்றி, பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் ஊழல்கள், தகுதியற்ற நியமனங்கள் உள்ளிட்ட முறைகேடுகள் குறித்த ஆதாரங்களும் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, காமராசர் பல்கலைக்கழகத்தை ஊழல்வாதிகளின் பிடியிலிருந்து மீட்பதற்காக Save MKU இயக்கமும் எழுச்சியுடன் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனால், தமது பதவிக்கு ஆபத்து ஏற்படும் என்று அஞ்சும் துணைவேந்தர் பி.பி.செல்லத்துரை, அதைத் தடுப்பதற்காகவே போராட்டங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

 

அதுமட்டுமின்றி, போராட்டத்தை முன்னெடுக்கும் பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் ஆகியோரை துணைவேந்தரின் ஆட்கள் தனித்தனியாக தொடர்பு கொண்டு மிரட்டல் விடுப்பதாகவும், போராட்டக்காரர்களை எப்படி ஒடுக்குவது என்பது தமக்குத் தெரியும் என்று துணைவேந்தர் செல்லத்துரை கூறி வருவதாகவும் கூறப்படுகிறது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது மதுரை பல்கலைக்கழக போராட்டம் விரும்பத்தகாத வழிகளில் முடிவுக்கு கொண்டு வரப்படக்கூடும்.

இது மிகைப்படுத்தப்பட்ட கற்பனை அல்ல.... நியாயமான அச்சம் தான். ஏனெனில், மதுரை பல்கலைக் கழக துணைவேந்தரின் பின்னணி அப்படிப்பட்டதாகும். மதுரை பல்கலைக்கழகத்திற்கு கல்யாணி மதிவாணன் துணைவேந்தராக இருந்தபோது, அவரது ஊழலை அம்பலப்படுத்திய பல்கலைக்கழக பாதுகாப்புக்குழுவின் அமைப்பாளரும், ஓய்வு பெற்ற பேராசிரியருமான சீனிவாசனை கூலிப்படையை ஏவி, கொடூரமாக தாக்கி கொலை செய்ய முயன்றதாக செல்லத்துரை மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் 294(பி), 324, 109, 307 ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இப்போதும் துணைவேந்தருக்கு எதிராக போராடுவோர் மீது அதேபோன்ற தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது.

எனவே, காமராசர் பல்கலைக்கழகத்தின் பெயரையும், புகழையும் மீட்பதற்காக போராடுவோருக்கு உரிய பாதுகாப்பை தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வழக்கின் விசாரணை முடிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை துணைவேந்தர் பதவியிலிருந்து செல்லத்துரையை நீக்கி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்