சேலம் சீலநாய்க்கன்பட்டி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறையினர் வெள்ளிக்கிழமை திடீர் சோதனை நடத்தியதில் கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டது.
![arrest](http://image.nakkheeran.in/cdn/farfuture/UJHoQ7H4NdXiAYbHoRhqu-cN3xnI9kEfh2u30V8tmeY/1552121794/sites/default/files/inline-images/z93.jpg)
சேலம் சீலநாய்க்கன்பட்டியில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சொத்துகள், டிரஸ்டுகள் இங்கு பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இந்த அலுவலகத்தில் சொத்துகள் பதிவு செய்யப்படும்போது பட்டியல்போட்டு லஞ்சம் வசூலிக்கப்படுவதாகவும், இடைத்தரகர்கள் மூலம் அதிகாரிகளுக்கு லஞ்சப்பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் சேலம் லஞ்ச ஒழிப்புப்பிரிவு காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்புப்பிரிவு டிஎஸ்பி தலைமையில் 3 காவல் ஆய்வாளர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் வெள்ளிக்கிழமை (மார்ச் 8) மாலை 6 மணியளவில் தாதகாப்பட்டி பத்திரப்பதிவு அலுவலத்தில் நுழைந்து திடீரென்று சோதனை நடத்தினர். பொதுமக்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் அலுவலகத்திற்கு உள்ளிருந்தும் யாரையும் வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.
அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு அறையிலும் உள்ள பீரோக்கள், மேஜை டிராயர்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ஒரு லட்சம் ரூபாயை கைப்பற்றினர். பதிவுத்துறை சார்பதிவாளர் விஜயகுமாரி, அலுவலர்கள் முருகேசன், கண்ணன், முனீர், ஜோசப் ஆகியோரிடம் அந்தப்பணம் யாருடையது? எப்படி வந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர். தொடர்ந்து நள்ளிரவு வரை விசாரணை நடத்தினர்.
மேலும், இது தொடர்பாக பத்திரப்பதிவு எழுத்தர்கள் மற்றும் இடைத்தரகர்கள் சிலரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதனால் பத்திரப்பதிவுத்துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.