திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி நகரத்துக்கு உட்பட்ட பரமேஸ்வர் நகர், வி.எஸ்.கே நகர், கோணமேடு ஆகிய பகுதியில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களில் பெரும்பாலானோர் அடிதட்டு மக்கள். அதே வாணியம்பாடி நகரத்துக்கு உட்பட்ட காதர்பேட்டை, மூர்த்தி நகர், நியூடில்லி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீர் கோணமேடு, வி.எஸ்.கே நகர், பரமேஸ்வர் நகர் வழியாக சென்று பாலாற்றின் கிளை ஆற்றில் கலக்கிறது.
கடந்த பல மாதங்களாக நகராட்சி துய்மை பணியாளார்கள் கழிவு நீர் கால்வாய்யை சுத்தம் செய்யவில்லை. இதனால் கழிவு நீர் பாலாற்றில் சென்று கலக்காமல் அப்படியே தேங்கி நிற்கிறது. அப்படி தேங்கும் கழிவு நீர் பரமேஸ்வர் நகர், வி.எஸ்.கே நகர் ஆகிய பகுதிகள் குளம் போல் தேங்கி நிற்கின்றன. அதோடு அந்தப் பகுதியில் குப்பைகள் சரிவர அள்ளி சுத்தம் செய்யாததால் அந்தப் பகுதிகள் பன்றி, நாய்களின் கூடாரமாக மாறியது. அதிகளவு துர்நாற்றம் வீசுகிறது. குளிர்காலமாக இருப்பதால் நோய் தொற்று ஏற்பாடும் அபாயம் உள்ளதால் அந்தப் பகுதி பொதுமக்கள் பலமுறை இதுகுறித்து நகராட்சிக்கு தகவல் கூறியுள்ளனர். நகராட்சி அலுவலகத்துக்கு நேரில் சென்று பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில், ஜனவரி 25ஆம் தேதி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்குப் பின்னர் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர். நடவடிக்கை எடுக்கிறேன் என ஆணையாளர் உறுதி அளித்ததின் பேரில் போராடத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர்.