தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடந்தது. மொத்தம் 77 மாவட்டச் செயலாளர்களில் எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விக்கு, ''சினிமா என்பது வேறு; அரசியல் என்பது வேறு. நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்பதை அவர்தான் கூற வேண்டும்'' என்றார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், ''நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் விரைவில் அறிவிப்பார். நடிகர் விஜய் மாணவர்களுக்கு உதவியது வரவேற்கத்தக்கது. விஜயகாந்த் போல வரவேண்டும் என நினைத்தால் அப்படி நினைப்பவர்களுக்கு மோசமான விளைவு தான் ஏற்படும். விஜயகாந்தின் வரலாறு 40 ஆண்டுகால வரலாறு. அவருடைய வாழ்வு ஒரு சரித்திரம். அவர் வழியில் ஒருவர் வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை நாங்கள் வரவேற்கிறோம். அது நல்ல விஷயம்தான். ஆனால் விஜயகாந்தைப் போல் வருவார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி” என்றார்.