பத்ம ஸ்ரீ சங்கீத கலாநிதி பேராசிரியர் பால்காட் கே.வி. நாராயண சுவாமி நூற்றாண்டு விழா சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டார்.
இந்த விழாவில் பேசிய அவர், “இசைக்கும் மருத்துவத்திற்கும் தொடர்பு உள்ளது. ராகங்கள் என்கிற இசை 50% நோய்களை சரி செய்கிறது. ஆனந்த பைரவி என்ற ராகத்தை சிகிச்சைக்குப் பின் இருக்கும் அறையில் இசைக்கச் செய்தால் சிகிச்சை பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய 50% வலி நிவாரண மருந்துகள் குறைக்கப்படுவதாக விஞ்ஞானப் பூர்வ ஆராய்ச்சி கூறுகிறது. இசையை இளைஞர்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இசையைக் கற்றால் மன அழுத்தமோ, தற்கொலைகளோ நடப்பதில்லை.
பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தால் சுகப் பிரசவம் நடக்க வாய்ப்புகள் உள்ளன. உடனே ராமாயணம் படித்தால் சுகப் பிரசவமாகும் என என்னை விமர்சிப்பார்கள். நான் ஆதாரப்பூர்வமாகவும், விஞ்ஞானப் பூர்வமாகவும் கூறுவேன். காரணம் இதனைக் கூறுவது மகப்பேறு மருத்துவர் தமிழிசை சௌந்தரராஜன்.
ஸ்லோகங்களையும், நமது பாடல்களையும் அடிக்கடி சொல்லும் நபர்களிடம் கிரகிப்புத் தன்மை அதிகம் இருக்கிறது. இதனை நாம் சொல்லவில்லை. இத்தாலியில் நடந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது. அங்கு சாதாரண நபர்களையும், இங்கு ஸ்லோகங்களை அடிக்கடி சொல்லும் நபர்களையும் கொண்டு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்தனர். அதில், ஸ்லோகங்களை அடிக்கடி சொல்லும் நபர்களுக்கு கிரகிப்புத் தன்மை அதிகம் உள்ளது என்பது தெரியவந்துள்ளது” எனப் பேசினார்.