'அமைச்சர் பொறுப்பில் உள்ளவர்கள் பிச்சை, ஓசி என்று பேசுவதையெல்லாம் ஏற்க முடியாது' என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
இன்று அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர் 'நேற்று அமைச்சர் எ.வ. வேலு பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை என்பது கலைஞர் போட்ட பிச்சை எனப் பேசி உள்ளாரே அதுபற்றி உங்கள் கருத்து என்ன?' என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜு, ''இந்த மாதிரி எல்லாம் பேசுவது அமைச்சருக்கு அழகல்ல. ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டு சென்னைக்கு மாற்றாக தென்பகுதியில் உள்ள மக்கள் ஏறத்தாழ 18 மாவட்டங்கள், 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு பயனளிக்கும் வகையில் இருக்கக் கூடியதாக இருக்கும்; வழக்குகள் அதிகமாக சென்னைக்கு வரும் பொழுது தேங்குகிறது என்ற அடிப்படையில் குழு அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் முதலமைச்சராக யாராக இருந்தாலும் செய்திருக்கலாம். அதை வந்து பிச்சை என்றெல்லாம் சொல்வது ஒரு மோசமான பழக்கம்.
விலையில்லாததை ஓசி என்று கேவலமாக பேசுவது; ஓசி டிக்கெட்டில் பெண்கள் போகிறார்கள் என்று சொல்வது; பிச்சை போட்டது என்று சொல்வது இதெல்லாம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல. மக்கள் போட்ட பிச்சையில் தான் இவர்கள் ஆளும் கட்சியாக இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணர வேண்டும்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''75 நாட்களில் ஒரு கோடியே ஒரு லட்சம் பேர் வந்திருப்பது சாதனை. அதிமுகவில் மட்டும் தான் இது முடியும். ஜெயலலிதா சொன்னார், எனக்கு பிறகும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் மக்களுக்கான பணியை செய்யும் என்று. அதற்கான பணிகள் தான் இவை'' என்றார்.