சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் தேடப்படும் நபராகக் காவலர் முத்துராஜை அறிவித்தது சி.பி.சி.ஐ.டி போலீசார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ்- மகன் பென்னிக்ஸ் கொலை வழக்கில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், இரண்டு உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர் முருகன் உள்ளிட்ட நான்கு பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடியாகக் கைது செய்து விசாரணை நடத்தினர். மேலும் கைதானவர்கள் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொலை வழக்கைப் பதிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர் முருகன் ஆகிய நான்கு பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதி உத்தரவின் பேரில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சாத்தன்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய மற்றொரு காவலரான முத்துராஜ் தலைமறைவாகினார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த சி.பி.சி.ஐ.டி ஐ.ஜி. சங்கர், "தலைமறைவான காவலர் முத்துராஜ் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். தந்தை- மகன் கொலை வழக்கில் இதுவரை அப்ரூவராக யாரும் மாறவில்லை. வழக்கில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை. கைதானவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாகி உள்ள காவலர் முத்துராஜ் இரண்டு நாட்களுக்குள் பிடிபடுவார். ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீசை விசாரிக்க வாய்ப்புள்ளது" என்றார்.
இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்ரீதர் உள்ளிட்டோரை மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.