மக்களின் குடிதண்ணீர் பயன்பாட்டிலிருக்கும் கிணற்றில் ஏதேனும் பொருள் விழுந்துவிடும்போது, ஆளை இறங்கவைத்து எடுத்தால் தண்ணீர் மாசடைந்துவிடும் என்பதால், அப்பொருளை எடுப்பதற்காக நம் முன்னோர்கள் பாதாளக் கரண்டி எனும் நங்கூரம் டைப்பிலான கூர்மையான கம்பிகளைக் கொண்ட வளையத்தைக் கிணற்றில் இறக்குவார்கள். அந்தப் பாதளக் கரண்டியோ விழுந்தப் பொருளை எடுத்ததோடு, உள்ளே கி்டக்கின்ற முந்தைய பொருட்களையும் கொத்தி எடுத்துக் கொண்டு வரும்.
அதைப் போன்றே சாத்தான்குளத்தின் தந்தை மகன், இருவரும் சாத்தான்குளத்தின் காவல்துறையினரால் வெறித்தனமாகத் தாக்கப்பட்டு ஒவ்வொரு நொடியும் ரண வேதனையை அனுபவித்து மாண்டிருக்கி்ன்றனர். அந்தக் காவல்துறையினரின் நிறத்தைப் பற்றி விசாரிக்கத் தொடங்கிய கணத்திலிருந்தே தோலுரிக்கும் ஆதாரங்கள் வரிசை கட்டி வருகின்றன. அடுத்த மெட்டீரியல் எவிடன்சாக ஜெயராஜின் மகன் பென்னிக்ஸ் கடையின் பக்க உள்ள கடையின் சி.சி.டி.வியில் மொபைல் கடையின் பக்கம் நடந்த காட்சிகள் பதிவாகி அம்பலத்திற்கு வந்திருக்கின்றது.
ஒன்றல்ல இரண்டல்ல. இது போன்ற பல்வேறு அசைக்க முடியாத அப்பா, மகனைக் குதறிய காக்கிகளுக்கு எதிரான ஆவணங்கள் கீழமை நீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை போய் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட இந்த சி.சி.டி.வி. சம்பவ நாளான 19.6.2020. அன்று இரவு 07.04. நேரங்களில் பதிவானவை. அது வெளிப்படுத்தும் காட்சிகள் இதுதான்.
கடையின் முன்னே ஒரு வாகனம் வந்து நிற்கிறது. முகக்கவசம் போன்று அணிந்திருக்கும் போலீஸ் ஒருவர் கடை முன்பாக நின்றிருந்தவரிடம் வந்து பேசுகிறார். பின்பு அவர் போய்விடுகிறார். பிறகு மேலும் இரு காவலர்கள் மொபைல் கடைக்கு வந்து அங்கு நின்று கொண்டிருக்கும் ஜெயராஜிடம் பேசுகின்றனர்.
2 நிமிடத்திற்குப் பின்பு அவர்களும் போய்விடுகின்றனர். அது சமயம் எந்த விதமான எதிர்ப்போ, பதற்றமோ நடக்கவில்லை. எல்லாம் சாதாரண நிலை. பின்பு ஒரு நிமிடம் கழித்து போலீசார் அழைத்ததால் கடை முன்பு நின்றிருந்த ஜெயராஜ் காரை நோக்கி நடந்து செல்கிறார்.
பின்னர் இரண்டு நிமிடத்திற்குப் பின்பு ஆட்டோ ஒட்டுநர் ஒருவர் அவசரமாகக் கடைக்குள்ளே போகிறார். அவர் ஜெயராஜைப் பிடித்து வைத்துள்ளதாகப் பென்னிக்சிடம் தெரிவித்ததும், தொடர்ந்து அவசரமாக, இருவரும் வெளியே வந்து காவல்துறை வாகனத்தை நோக்கிச் சென்று ஏதோ பேசுகின்றனர். பிறகு ஜெயராஜூடன் அந்த வாகனம் சென்று விடுகிறது. தொடர்ந்து கடைக்கு வந்த பென்னிக்ஸ் வீட்டிற்கு விஷயத்தைச் சொல்லிவிட்டு நண்பருடன் பைக்கில் பின் பக்கம் ஏறிக் காவல் நிலையம் கிளம்புகிறார்.
இந்தக் காட்சிகள் தான் பென்னிக்சின் பக்கத்துக்கடை சி.சி.டி.வியில் பதிவானது. இப்போது இது நிஜத்தை அம்பலப்படுத்துகிறது. போலீசாரின் சாக்குமூட்டைப் பொய்யை சுக்கலாக்குகிறது. அதே சமயம் ஜெயராஜூம், பென்னிக்சும் கொடூர எஸ்.ஐ.க்காளால் குதறப்பட்ட ஜூன் 19- ஆம் தேதி அன்று காவலர் முருகன் கொடுத்த புகாரின் அடிப்படையில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் அவர்களுக்கு எதிராக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அதில், வழக்கப்படி காவலர் இரவு 09.15 மணியளவில் பென்னிக்சின் கடைப் பகுதியில் கண்காணிப்புப் பணியிலிருந்தார். பென்னிக்சின் மொபைல் கடை ஊரடங்கு நேரத்திலும் திறந்திருந்தது விதிகளை மீறிய செயலாகும். கடையின் முன்னே ஜெயராஜ் பென்னிக்ஸ், மற்றும் சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவர்களைக் கலைந்து போகச் சொன்னதற்கு மற்றவர்கள் கலைந்து சென்றனர்.
ஆனால் ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கலைந்து போக மறுத்து தகாத வார்த்தைகளால் காவலர்களைத் திட்டித் தரையில் உருண்டு புரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் அவர்களுக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளது என எப்.ஐ.ஆர். பதிவாகி அரசுப் பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்தல், தகாத வார்த்தைகளால் திட்டுதல். அரசு உத்தரவை மீறுதல். நான்கு பேருக்கு மேல் கூடியது என்று தந்தை மகன் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீஸின் எப்.ஐ.ஆர். படி, கடையின் தரையில் படுத்து உருண்டதால் உள்காயம் ஏற்பட்டுள்ளது. என்றால் அவர்கள் அணிந்திருக்கும் உடைகள் அழுக்கேறிக் கலைந்திருக்க வேண்டுமே. ஆனால் சி.சி.டி.வி. காட்சியில் பதிவான அவர்களின் ஆடைகள் கலையாமலிருக்கிறது. போலீசின் குற்றச்சாட்டுப்படி உள்காயம் ஏற்பட்டிருந்தால் அவர்களால் நடக்க முடியுமா? பதிவுக் காட்சிகளின் படி அவர்கள் இயல்பாகவே நடந்து செல்வது அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.
எப்.ஐ.ஆருக்கும், காட்சிப் பதிவுகளுக்குமுள்ள முரண்பாடுகள், தப்பை மறைக்க, போலீசாரின் திட்டமிடப்பட்ட, கணக்கிடப்பட்ட, பொய்யான எப்.ஐ.ஆர். என்பதை வெளிப்படையாக்கிறது. போலீசார் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்காகவே பதியப்பட்ட எப்.ஐ.ஆர். அது, என்ற பேச்சுகள் வைரலாகின்றன. எப்.ஐ.ஆர் இப்படியிருக்க காவல்நிலையத்தில் தந்தை மகன் இருவரது ஆசனவாயிலிருந்து வடிந்த ரத்தம், போலீசாரால் கேட்டு வாங்கப்பட்ட 8 லுங்கிகளை மாற்றியும் ரத்தப் போக்கு நிற்காமல், தொடர்ந்து வடிந்ததின் அர்த்தமென்ன.
பொதுவாக, போலீசார் ஒருவர், யாரையாவது சந்தேகத்தின் பேரில் காவல் நிலையம் கொண்டு வந்து அடித்து உதைத்துத் தாக்கிய பின்பு, அவர் சம்பந்தமேயில்லாதவர் என்று தெரியவரும் போதும், அல்லது பிடித்த நபரைக் கொண்டு வந்து காரணமின்றி அடித்து நொறுக்கினாலும் அவர்களை அப்படியே வெளியே அனுப்பிவிடமாட்டார்கள். அவர்கள் தகராறு செய்தார்கள் என்று குறைந்தபட்சம் செக்ஷன் 75- இன் பிரிவுப்படி, மெட்ராஸ் சிட்டி போலீஸ் ஆக்ட்டின்படி பெட்டிக் கேஸ் எனப்படும் புட்அப் கேஸ் போட்ட பிறகே வெளியே அனுப்புவார்கள். இதற்கு ரிமாண்ட் கிடையாது. மிஞ்சிப் போனால் நீதிமன்றத்தில் ஐந்நூறு ரூபாய் அபராதம் மட்டுமே. இப்படிப் பொய்யான எப்.ஐ.ஆரை அவர்கள் மீது பதிவு செய்து தாங்கள், தாக்கியதைத் தங்களுக்குள்ளேயே நியாயப்படுத்தி தங்களைத் தற்காத்துக் கொள்வார்கள்.
அதன் பின் காயம் காரணமாக அந்த நபர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அட்மிட் ஆகி நடந்தவைகளை வாக்கு மூலம் கொடுத்தாலும், அது, சம்பந்தப்பட்ட போலீசாரைப் பாதிக்காது. காரணம் அவர் மேல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட அந்த எப்.ஐ.ஆர். அந்தப் போலீசாரைக் காப்பாற்றிவிடும்.
ஆனால் தப்பித்தவறி தாக்கிய நபர் மீது எப்.ஐ.ஆர். போடாமல் அப்படியே வெளியே அனுப்பி விட்டால், காயம்பட்ட அந்த நபர் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆகி, தான், அடிபட்டது பற்றி மெடிக்கல் வாக்குமூலம் கொடுத்து விடுவார், அந்த ஆவணத்தின் மூலம், தாக்கிய போலீசார் மீது கோர்ட்டில் வழக்குப் பதிவாகி அது பிரைவேட் கேஸாகி விடும். அது சீரியஸாகி அந்தப் போலீசார் வழக்கு காரணமாக சஸ்பெண்ட் ஆகி அவரின் உடுப்பே இறங்கிவிடும் நிலை உருவாகிவிடும். இப்படிப்பட்ட ஒரு நிலை தங்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே, காவல்துறை உலகில், இது போன்ற வெறி அடிகளுக்குப் புட்அப் கேஸ் போடுவது, எழுதப்படாத சட்ட மரபாகிவிட்டது. அதே டைப்பில் போடப்பட்டது தான் சாத்தான்குளம் போலீசாரின் பொய்யான எப்.ஐ.ஆர், என்கிறார்கள் அனுபவமுள்ள வழக்கறிஞர்களும், பணி ஓய்வு பெற்ற முன்னாள் காவலர்களும்.
பாறை மனம் கொண்டவர்கள் கூட செய்யத் தயங்கும் பஞ்சமாபாதகத்தைக் கூசாமல் செய்திருக்கும் சாத்தான்குளம் காக்கிகள், ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்களைச் சொல்லி நீதிதேவன் கரங்களில் வசமாகச் சிக்கியுள்ளார்கள்.