தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேற்கு மாவட்டங்களில் வெப்பக்காற்று கிழக்கு திசை நோக்கி வீசுவதால் வெப்பம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நேற்று (30/04/2022) 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பம் பதிவாகியுள்ளது. வெயில் அதிகமாக இருக்கும் பிற்பகல் நேரங்களில் மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெயிலின் தாக்கத்தில் இருந்து நமது உடல்நலனை எவ்வாறு பார்த்துக் கொள்வது? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!
வெயிலில் செல்ல வேண்டி இருந்தால் வெளிர் நிற குடைகளைப் பயன்படுத்த வேண்டும்.
அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும்; தினசரி மூன்று லிட்டர் வரை தண்ணீர் பருக வேண்டும்.
ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடலை இறுக்கும் ஆடைகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
பொட்டாசியம் நிறைந்த இளநீரை அதிகம் பருக வேண்டும்; பழங்கள், பழச்சாறுகளைப் பருக வேண்டும்.
முகம், கை, கழுத்துப் பகுதிகளில் 'சன் ஸ்கிரீன் லோஷன்' தடவிக் கொள்ளலாம்.
பருத்தி ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும்; வெளிர்நிற ஆடைகள் சிறந்தது.