உப்பு உற்பத்தி, முத்துக்குளிப்பிற்கு முதலிடத்திலிருப்பது மட்டுமல்ல, ஆறுபடை வீடான திருச்செந்தூரில் முருகப்பெருமானின் செந்திலாண்டவர் ஆலயம். தொழிலாள மக்கள் நெருக்கம் கொண்ட தீப்பெட்டி மற்றும் கடலைமிட்டாய் உற்பத்தியையும் உள்ளடக்கிய கோவில்பட்டி. அடுத்து வேளாண் பொருட்களை உற்பத்தி செய்கிற கிராம புற ஏரியாக்கள் என கலவையான தொழிலையும், மக்கள் நெருக்கத்தையும் கொண்ட தூத்துக்குடி மாவட்டம் தற்போது கரோனா தொற்று இல்லா மாவட்டமாக மாறியுள்ளது ஆறுதலான விஷயம்.
ஆரம்பத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, தூத்துக்குடி மற்றும் நெல்லை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அடுத்தடுத்து குணமாகி வீடு திரும்பினர். இவர்களில் போல்டன்புரம் பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டி மட்டுமே உயிரிழந்தார்.
இந்நிலையில் பசுவந்தனையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை மட்டும் கரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவரும் (மே.1) டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார் என்று அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் கரோனா தொற்று தடுக்கப்பட்டு கரோனா இல்லாத மாவட்டமாக தூத்துக்குடி மாறியுள்ளது. இது போன்று குணமடைந்து வீடு திரும்புபவர்களை அமைச்சரான கடம்பூர் ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பழங்கள் கொடுத்து வழி அனுப்பி வைத்தார்கள். இதனடிப்படையில் தூத்துக்குடி ஆட்சியரான சந்தீப் நந்தூரி ஊரடங்கைத் தளர்த்தலாம் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக தெரிகிறது.
மேலும் தூத்துக்குடி மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு நிறுவனங்களில் பணிகளுக்காக வந்து தங்கிய வெளிமாநிலத்தவர்கள் இரண்டாயிரம் பேர் கணக்கெடுக்கப்பட்டதில் 1200 பேர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 24 பேருக்கு தொற்றுள்ளதா? என்று நகர் நல மையங்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் பாதுகாப்புகள் மற்றும் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கரோனாவை விரட்டியிருக்கிறது உப்பு மாவட்டம்.