தூங்கா நகரமான மதுரையைத் தூங்கச் செய்துவிட்டது கொரோனா வைரஸும், 144 தடை உத்தரவும். கொரோனா அச்சத்தால் உறைந்து கிடக்கும் மதுரையை, சரியாக மாலை 6 மணிக்கு மேல் "இந்த நேரத்தில் எதற்காக வெளியே வருகின்றீர்கள்? எங்கே செல்கின்றீர்கள்? வெளியே வரக்கூடாது என்று தெரியாதா?" என்று காவல்துறை ஒலிபெருக்கியில் எச்சரித்துக்கொண்டிருந்த வேளையில்,நாமும் மதுரையை ஒரு ’ரவுண்ட்’ அடித்தோம்.
மதுரை ரயில் நிலையம் பூட்டப்பட்டு களையிழந்து காணப்பட்டது. ரயில் நிலைய வளாகத்துக்கு வெளியே, வானமே கூரையென படுத்திருந்த பிளாட்ஃபார வாசிகளைத் தட்டியெழுப்பி, மாநகராட்சி வாகனத்தில் திணித்துக் கொண்டிருந்தனர். பெரியார் பேருந்து நிலையப் பகுதியில், கட்டபொம்மன் சிலை அருகில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். எம்.ஜி.ஆர். (மாட்டுத்தாவணி) பேருந்து நிலையத்திலோ, நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும், பேருந்துகள் ஓடாத நிலையில், அவரவர் ஊருக்குச் செல்ல முடியாமல் புலம்பித் தவித்தனர். 5 பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடக்கூடாது என்ற காவல்துறையின் எச்சரிக்கை, மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வராத பேருந்துகளுக்காகக் காத்திருந்தவர்களின் பரிதவிப்புக்கு முன்னால், செல்லுபடியாகவில்லை.
ஃபாரன்சிக் பிரிவில் வேலை பார்ப்பதாகச் சொன்ன ராஜேஷ், “இன்னும் 21 நாட்களுக்கு ஊரடங்கு என்று அறிவித்துவிட்டார் பிரதமர். சொந்த ஊரான திருநெல்வேலிக்குச் செல்வதற்கு இனிமேல் பஸ் இல்லை. ஊருக்குப் போக முடியாமல், சாப்பிடுவதற்கும் வழியில்லாமல், இன்னும் எத்தனை மணி நேரம்.. அட கொடுமையே! இன்னும் எத்தனை நாட்கள், இந்த பஸ்-ஸ்டாண்ட்ல இருக்க முடியும்? நடந்தா போக முடியும்? கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கை எல்லாம் சரிதான். நாங்களும் இந்தியக் குடிமகன்கள்தான். எங்களைக் காப்பாற்ற யாரும் இல்லையே?” என்றார் பரிதாபமாக. அவர் சொன்னதுபோல், நடந்து செல்ல முடிவெடுத்து, சிலர் குடும்பத்தோடு கிளம்பினார்கள்.
இரவு 9 மணி கடந்தும் பிசியாக இருந்தது மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம். ராஜாஜி அரசு மருத்துவமனையில் அமைதி நிலவியது. வெறிச்சோடி இருண்டு கிடந்த சாலைகளின் மீது வெளிச்சம் பாய்ச்சியதெல்லாம் ஏடிஎம்-களும் மருந்துக் கடைகளும்தான். பெட்ரோல் பங்குகள் அனைத்தும் திறந்திருந்தன. பகல், இரவு என்ற வித்தியாசமே இல்லாமல், உழைக்கும் மக்கள் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கீழமாரட் வீதி தூங்கி வழிந்தது.
கோரிப்பாளையம் தேவர் சிலை அருகில், டூ வீலர் மற்றும் கார்களில் சென்றவர்களை நிறுத்திய காவலர்கள், “இந்த வழியே போகாதீங்க. பெரிய அதிகாரி ஃபைன் போடுவார். அப்படியே திரும்பிப் போங்க..” என்று திருப்பிவிட்டபடி இருந்தனர். அம்மக்களும் அங்கிருந்து தமுக்கம் பக்கமாக யு டர்ன் அடித்து வேறு ரூட் வழியாகச் சென்றனர். இந்த கொரோனா சூழலிலும், காவலர் ஒருவர் கடமை தவறாதவராக, ஹெல்மெட் அணியாத ஒருவரைப் பார்த்து ‘எங்கே ஹெல்மெட்?’ என்று கேட்டார்.
தன் வயிற்றுப்பாட்டுக்காக, அரசரடி பகுதியில் ஒருவர், தள்ளுவண்டியில் இட்லி விற்றுக்கொண்டிருந்தார். அந்த ஏரியா சுவரொன்றில், வேறொரு நடிகரைத் தாக்கும் விதத்தில், அடங்காத அஜித் குரூப்ஸ் என்ற பெயரில், ’வரி ஏய்ப்பு செய்யாதவரே!’ என்று ‘தல’ நடிகரை போஸ்டரில் வாழ்த்தியிருந்தனர். பிடித்தவரை வாழ்த்துவதற்கும், பிடிக்காதவரை கேலி பண்ணுவதற்கும், ஒரே வார்த்தையில் ‘நச்’ என்று மதுரைவாசிகளால் மட்டுமே சொல்ல முடியும்.
மதுரை புறவெளிச்சாலையில், இரவு 10 மணிக்கு மேல், பெண் ஒருவர் தோப்புக்கரணம் போட்டு, பிள்ளையாரை வழிபட்டுக் கொண்டிருந்தார். அவரிடம் பேச்சு கொடுத்தோம். “உலகம் முழுக்க நோவு வந்து ரொம்ப பேரு சாவுறாங்க. எதுக்கு தம்பி இந்த நைட் நேரத்துல சுத்திக்கிட்டிருக்கீங்க. சீக்கிரமா வீட்டுக்கு போங்க. சோப்பு போட்டு நல்லா கையைக் கழுவிட்டு சாப்பிட்டு தூங்குங்க. மனசு பொறுக்க முடியாமத்தான் கோயிலுக்கு வந்தேன். ஊரே ரொம்ப பயந்து கிடக்கு. சட்டுபுட்டுன்னு இதையெல்லாம் சரிபண்ணுன்னு பிள்ளையாரப்பன்கிட்ட சொல்லிருக்கேன். எல்லாம் சரியாயிரும்.” என்றபடி கண்களைத் துடைத்துக்கொண்டார்.
இரவு நேரத்தில் தனியாக வந்து, தனது ஒரே நம்பிக்கையான இறை சக்தியிடம், உலக மக்களின் நலனுக்காக, பெண் ஒருவர் கோரிக்கை விடுக்கிறார் என்றால், அவருக்கு எத்தனை பரந்த மனது! மதுரையை ஆள்கிறாள் என்று வழிபடக்கூடிய மீனாட்சியை, லோக மாதா என்றே அழைக்கின்றனர், பக்தர்கள். கோவிலில் வழிபட்ட அந்தப் பெண், மூக்குத்தி இல்லாத மீனாட்சியாக, நம் கண்ணுக்குத் தெரிந்தார்.