ஒவ்வொரு வருடமும் உலகத்தில் உள்ள அனைத்து நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள், நிபுணர்கள் அனைவரும் ஒன்று கூடி நுரையீரல் மாநாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஹாங்காங் நாட்டில் நவ 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை 4 நாட்கள் நுரையீரல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுரையீரல் சிறப்பு மருத்துவர்கள், நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, நிமோனியா, காற்று மாசுபாடு உள்ளிட்ட நுரையீரல் நோய்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து கடலூரைச் சார்ந்த நுரையீரல் நிபுணர் பால. கலைக்கோவன் கலந்து கொண்டார். இந்தியா முழுவதிலும் இருந்து 15 மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்திய நாட்டின் சார்பாக, அதிலும் குறிப்பாகத் தமிழகத்தின் சார்பாக நுரையீரல் தொற்று கிருமிகள், நுரையீரல் புற்றுநோய் சம்பந்தமான தனது கருத்துக்களை மருத்துவர் பால கலைக்கோவன் இந்த மாநாட்டில் எடுத்துரைத்துள்ளார். இந்த மாநாட்டில் பல மருத்துவ ஆய்வுக் கட்டுரைகளும் வருங்கால நுரையீரல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவர் கலைகோவன் கூறுகையில், “காற்றில் உள்ள நுண்ணிய துகள்களைச் சுவாசிக்கும் போது, நுரையீரலுக்குள் சென்று அங்கேயே தங்கி விடும். தொடர்ச்சியாக மாசு நிறைந்த சூழலில் வாழும் போது, ரோஜா பூவின் பிங்க் நிறத்தில் இருக்கும் நுரையீரலின் நிறம் கருப்பாக மாறி விடுகிறது. இதில் உள்ள நைட்ரிக் அமிலம், கார்பன் மோனாக்சைட் போன்ற நச்சு வாயுக்களால் நரம்பு மண்டலம், மூளை பாதிக்கப்படும். காற்று மாசால் பார்வைக் கோளாறு, நினைவாற்றல் பாதிப்பு, படிக்கும் திறன் குறைவது, அடிக்கடி தொற்று நோய்கள் பாதிப்பு, கேன்சர் அபாயத்தையும் குழந்தைகளிடம் ஏற்படுத்துகிறது. குழந்தைப் பருவத்தில் இருந்தே மாசு நிறைந்த சூழலில் இருந்தால், 60 வயதில் வர வேண்டிய உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை கோளாறு, கேன்சர், 30 வயதிலேயே வந்து விடும். கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் காற்று மாசான சூழலில் இருந்தால், எடை குறைந்த குழந்தை பிறக்கும்.
கடலூரில் 15 ஆண்டுகளாக உள்ள என் மருத்துவ அனுபவத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக சிகரெட் பழக்கம் இல்லாத இளம் வயதினரின் நுரையீரல், வழக்கமான ரோஜா இதழ் போன்ற பிங்க் நிறம், கருப்பு, பிரவுன் நிறமாக மாறியிருப்பதைச் சிகிச்சையின் போது பார்க்க முடிகிறது. ஆண், பெண் இரு பாலருக்கும் 40 வயதிலேயே நுரையீரலின் திறன் குறைகிறது. நிறமும் மாறுகிறது. 100 பேரில், 20இலிருந்து 30 பேருக்கு நுரையீரலின் நிறம் மாறியிருப்பதைப் பார்க்கிறோம்.
கடந்த 6 மாதங்களுக்கு முன் சிங்கப்பூரில் நடந்த சுவாச மண்டல கருத்தரங்கில், தைவான் நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் செய்த ஆய்வில், நம் நாட்டுப் பெண்களின் மரபணுவில் உள்ள ‘7பி’ என்கிற மரபணு, மாசு நிறைந்த காற்றால் தூண்டப்படும் போது, கேன்சராக மாறும் அபாயம் உள்ளது. இதனால், 25 வயதிலேயே நுரையீரல் கேன்சர் பாதிப்பு உள்ளது. மாசு நிறைந்த காற்றைச் சுவாசிப்பது நுரையீரலை மட்டும் பாதிப்பதில்லை; அதிக ஆழத்திற்குச் சென்று, மரபணுவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பது தான் அதிர்ச்சியான தகவல். நம் நாட்டில், 40 வயதிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு நுரையீரல் கேன்சர் வருவது மிகவும் அதிகம். நான் மருத்துவம் பார்த்தவரை 22 வயது கர்ப்பிணிக்கும், 26 வயது கல்லூரி மாணவருக்கும் நுரையீரல் கேன்சர் இருப்பதைக் கண்டுபிடித்தோம். மாசிலிருந்து நுரையீரலைப் பாதுகாப்பது எளிது.
ஒரு கொசுவர்த்தி சுருளில் இருந்து வரும் புகை, 100 சிகரெட் புகைக்குச் சமம். இது உறுதி செய்யப்பட்ட ஆய்வு. ஒரு நாளைக்கு எட்டு மணி நேர ஆழ்ந்த துக்கம் அவசியம். இந்த துகள்களை வெளியேற்ற அல்லது பாதிப்பில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ளும் திறனை வளர்க்க இது உதவும். உணவில் பழங்கள், காய்கறிகள் அதிகமாகச் சேர்க்க வேண்டும். இரவு நேரத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகள், சிகரெட்டை தவிர்ப்பது நல்லது. காற்று மாசால் நிறம் மாறும் நுரையீரலைத் தடுக்க அனைவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உறுதியேற்போம்” என்றார்.