Skip to main content

திருவாரூரில் தீ விபத்து, ஐந்துவீடுகள் எரிந்து நாசமானது

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

 

திருவாரூர் நகரில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் 5 குடிசைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

 

திருவாரூர் நெய்விளக்கு தோப்பு பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயக் கூலி வேலை செய்பவர்களாகவும், தினக்கூலி மற்றும் தட்டு ரிக்சா மீன் வியாபாரம் செய்பவர்களாகவும் ஜீவனம் செய்துவருகின்றனர்.  அந்தப் பகுதியில் குடிசை வீடுகள் அதிகமாக உள்ளன.

 

f

 

அந்தப் பகுதியினுடைய வீதியின் முடிவில்தான் திருவாரூரின் பிரதான சுடுகாடும் உள்ளது. அங்கு அதிக அளவில் சவ ஊர்வலங்கள் செல்லும் வீதியாகவும் உள்ளது. சவ ஊர்வலங்களில் செல்லுபவர்கள் பட்டாசுகள் வெடித்து செல்லுவது வழக்கமான ஒரு நிகழ்வாகவே இருந்துவந்தது.

 

அவ்வாறு இன்று ஒருவர் இறந்ததால் பட்டாசு வெடித்து சவ ஊர்வலம் சென்றபோது அதில் இருந்து பறந்து வந்த தீப்பொறி ஒரு குடிசை வீட்டின் மீது பட்டு தீப்பிடித்து எரியத்துவங்கியது. காற்றின் வேகம் அதிகமானதால் தீ மளமளவென பரவி அடுத்தடுத்த வீடுகளிலும் பரவியது. இதில் 5 குடிசைகள் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.

 

 தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்த போதும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. தீயை கட்டுக்குள் கொண்டுவருவதற்குள் ஐந்து குடிசைகளும் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது.  இந்த சம்பவம் திருவாரூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்