திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வெளியூர் பக்தர்கள் வருகிறார்கள். அப்படி வருபவர்களில் 90 சதவிதம் பேர் 14 கி.மீ சுற்றளவுள்ள மலையை கிரிவலம் வருகிறார்கள். இந்த கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான கோயில்கள் சிறியதும், பெரியதுமாக உள்ளன.
இதில் பல கோயில்கள் அரசின் அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலும், சில தனியார்களின் கோயில்களாகவும் உள்ளன. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களை தங்களால் பராமரிக்க முடியவில்லை என சில தனிநபர்களின் கீழ் பராமரிக்க அறநிலையத்துறையே விட்டுள்ளது, அந்த கோயில்களில் வைக்கப்பட்டுள்ள உண்டியல்கள் மட்டும் அறநிலையத்துறை வைத்துள்ளது.
கிரிவலப்பாதையில் 7வது கி.மீ உள்ளது திருநேர்அண்ணாமலை. இங்கு சிவன் கோயில் உள்ளது. பாழடைந்து இருந்த இந்த கோயிலை எல்லப்பன் என்கிற சாது, தூய்மைப்படுத்தி, செப்பனிட்டு, பராமரித்து வந்தார். கோயிலை மிக சுத்தமாக வைத்திருந்தார். இதனால் கிரிவலப்பாதையில் செல்லும் ஒவ்வொரு பக்தரும் இந்த கோயிலுக்குள் சென்று தரிசனம் செய்துவிட்டே செல்வார்கள். அறநிலையத்துறை சார்பில் உண்டியலில் காணிக்கையும் சேர்ந்தது.
தட்டிலும் காணிக்கை விழுந்தது. இதுவே இந்த கோயில் பராமரிப்புக்கும் உதவியது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இந்த கோயிலுக்கு வந்த சிலர், எங்க சாதிக்காரங்க மட்டும் தான் கருவரையில் போய் பூஜை செய்ய அதிகாரம் படைத்தவர்கள் எனச்சொல்லி அங்கிருந்த எல்லப்பன் என்கிற சாது உட்பட சிலரை அடித்துவிரட்டினார்கள். இனி நாங்களே இங்கு பூஜை செய்யப்போகிறோம் எனச்சொன்னார்கள். அந்த கோயிலை மட்டுமல்லாமல் அருகில் இருந்த தனியார் உருவாக்கி எழுப்பிய அம்மன் கோயிலையும் கைப்பற்றிக்கொண்டார்கள். எதிர்த்தவர்கள் மீது அறநிலையத்துறை அதிகாரிகளை வைத்து புகார் தந்தார்கள். உண்டியல் வைத்திருப்பதால் எங்களுக்கே சொந்தம் என்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள். அதனால் நாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்கிறார்கள்.
இந்நிலையில் எல்லப்பன் சாது என்பவர் தன்னை திருநேர்அண்ணாமலை கோயிலுக்குள் சென்று அபிஷேகம் செய்ய அனுமதிக்க மறுக்கிறார்கள் எனச்சொல்லி கடந்த பிப்ரவரி மாதம் 28ந்தேதி உண்ணாவிரதம் தொடங்கினார். 8 வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்து நடத்திவருகிறார். இதனால் அவரது உடல் நலிவுற்றுள்ளது என்கிறார்கள் கிரிவலப்பாதையில் உள்ள பிற சாதுக்கள்.
கோயிலை பராமரிக்க வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என்பது அவர்களது நோக்கமல்ல. தட்டில் விழும் பணத்தை முதன்மைபடுத்தியே சிலர் இந்த கோயிலை கையகப்படுத்தியுள்ளார்கள் என்கிறார்கள் கிரிவலப்பாதையில் உள்ள சில சாதுக்கள். தற்போது இது கிரிவலப்பாதையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.