திருச்சியை சுற்றியுள்ள மத்திய மாவட்டங்களில் பெரும்பான்மை சமூகத்தினராக முத்தரையர் சமூகம் உள்ளது. இந்த சமூகத்தின் அடிப்படையில் அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை அறிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் முத்தரையர்கள் எண்ணிக்கை எவ்வளவு உள்ளது என்பதை சரியாக அறிவிக்க வேண்டும் என்று முத்தரையர் எழுச்சி சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த சங்கத்தின் கவுரவ தலைவர் பன்னீர்செல்வம் வெளியீட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் ஒரு கோடி முத்தரையர்கள் உள்ளனர். ஆனால் 2வது தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலக்குழு முத்தரையர், முத்துராஜா, அம்பலக்காரர், வலையர், செட்டிநாட்டு வலையர் ஆகியோர் எண்ணிக்கை 15 லட்சம் என்று தவறுதலாக கணக்கில் கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனை சுட்டிக்காட்டி தமிழக அரசிடம், முத்தரையர்களின் சரியான எண்ணிக்கையை கணக்கிட்டு வெளியிட வேண்டும் என்று பல்வேறு முறை கோரிக்கை வைத்தும் போராடியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் முத்தரையர்கள் சந்தித்து வரும் இழப்புகள் ஏராளம்.
இந்த தவறான மக்கள் தொகை கணக்கில் கொள்ளப்படுவதால் முத்தரையர் சமுதாயம் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப மக்கள் பிரதிநிதிகளை, கிராமபஞ்சாயத்து, வார்டுகவுன்சிலர், எம்.எல்.ஏக்கள்,எம்.பி.கள் முதலான அனைத்து பொறுப்புகளிலும் பிரநிதித்துவம் பெற இயலவில்லை. எனவே முத்தரையர்களின் தொகுதி வாரியான வாக்காளர் எண்ணிக்கையின் உண்மை தன்மையினை சரியாக அறிந்து சரியான எண்ணிக்கையை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.