திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டலம் சார்பில் இன்று (24.01.2024) மற்றும் நாளை (25.01.2024) என இரு நாட்கள் சென்னை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், பண்ருட்டி, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ஆரணி மற்றும் ஆற்காடு காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், தைப்பூசம், குடியரசு தினம் மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு மக்கள் சென்னையிலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர், வேலூர், காஞ்சிபுரம் மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பாக இந்த நாட்களில் கூடுதலாக 350 சிறப்புப் பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே https://www.tnstc.in/home.html என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து சிறப்புப் பேருந்துகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த விடுமுறை நாட்களை முடித்து பொதுமக்கள் மீண்டும் சென்னை மற்றும் பிற ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக 28.01.2024 மற்றும் 29.01.2024 ஆகிய தேதிகளில் 250 சிறப்புப் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. மேலும், பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர் என விழுப்புரம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
அதே சமயம் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் சேலம் உள்ளிட்ட இடங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 580 சிறப்புப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் மற்றும் பிற இடங்களில் இருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.