Skip to main content

தி.மலை மகாதீபம்: தீபத்தை காண அதிகாரிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள்: வெதும்பும் பக்தர்கள்

Published on 07/12/2019 | Edited on 07/12/2019

 


கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் டிசம்பர் 1ந் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அன்று முதல் திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாடவீதியில் காலை மற்றும் இரவில் வலம் வரும் உற்சவ மூர்த்திகளை தரிசனம் கண்டு வருகின்றனர். வரும் 7ந் தேதி பெரியத்தேர் என்கிற மகாரதம் வீதியுலா நடைபெறும். அதற்கடுத்து 10ந் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகாதீபமும் ஏற்றப்படும்.
 


தீபத்தன்று கிரிவலம் வரவும், மலையேறி அண்ணாமலையார் பாதத்தை காணவும் தென்னிந்தியாவின் பல பகுதிகளில் இருந்து சுமார் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. கார்த்திகை தீபத்தன்று கிரிவலம் வருவது, மலையேறி கடவுளை பக்தர்கள் வேண்டுகின்றனர், தங்களது நேர்த்தி கடன்களை செலுத்துகின்றனர். மலையில் தீபம் ஏற்றுவதற்கு முக்கிய காரணம், அர்த்தநாரீஸ்வரர்.

 

thiruvannamalai



கைலாயத்தில் சிவனும் – சக்தியையும் அமர்ந்திருந்தபோது, சிவபெருமானை காண பிருங்கி முனிவர் சிவனை சந்திக்க வந்தார். சிவனும் அனுமதிக்க, பிருங்கி முனிவர், சிவபெருமானை மட்டும் வணங்கினார், சக்தியை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் அதிருப்தியடைந்த சக்தி, பிருங்கி முனிவரிடம் என்னை வணங்காதது ஏன் என கேள்வி எழுப்பினர்.


இந்த உலகில் சிவன் ஒருவனே கடவுள். நான் அவரை மட்டும்மே என பிருங்கி முனிவர் பதிலளித்தார். இந்த பதிலால் கோபமடைந்த சக்தி, இந்த சக்தியில்லையேல் சிவன் இல்லை என்றார். பிருங்கி முனிவர், சிவன் இல்லையேல் சக்தியில்லை என பதில் வாதம் வைத்தார். வாதம் ஒருக்கட்டத்தில் சக்தியின் அதீத கோபமானது. ஒருக்கட்டத்தில் பிருங்கி முனிவர் உடலில் ரத்தம், சதை நீங்கி எலும்பு கூடாக வலம் வரவேண்டும் என சாபம்மிட்டார் சக்தி. பிருங்கி முனிவரும் அப்படியே மாறினார். இதில் அதிர்ச்சியான சிவன், சிவனும் சக்தியும் வெவ்வேறல்ல என சக்திக்கு விளக்கினார். விளக்கத்துக்கு பின், அதை உலகத்துக்கு உணர்ந்த உங்கள் உடலில் எனக்கு பாதியை தாருங்கள் என சக்தி சிவனிடம் கேட்டார்.


பிருங்கி முனிவருக்கு நீ அளித்த தவறான சாபத்துக்கு, நீ என்னை பிரிந்து வாழ வேண்டும். இந்த பிரிவு காலத்தில் உன் வேண்டுக்கோள் நிறைவேற என்னை நோக்கி கடும் தவம் செய் எனச்சொல்லி பூலோகத்துக்கு அனுப்பினார். சக்தியும் கடும் தவம் புரிந்தார். அதன்பின் தனது உடலில் இடப்பாகத்தை தந்து சிவனும் – சக்தியும் ஒன்று என்றார். இந்த உருவத்துக்கு பெயர் அர்த்தநாரீஸ்வரர். அந்த உருவத்தை பெற்ற தலம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் என்கிறது புராணம்.


அந்த உருவத்தில் உலகத்துக்கு காட்சியளிக்க வேண்டும் என்பதற்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மகாதீபத்தன்று மாலை 5.55 மணிக்கு அலங்காரத்துடன் கோயிலுக்குள் இருந்து வெளியே வருவார் அர்த்தநாரீஸ்வரர். அவர் வரும்போது கொடிமரத்தின் கீழே தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். அதனை கண்டுவிட்டு அப்படியே கோயிலுக்குள் சென்றுவிடுவார். சரியாக அதிகபட்சம் 5 நிமிடங்களே அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு வெளியே வந்து காட்சியளிப்பார். வருடத்துக்கு ஒருமுறை மட்டும்மே இப்படி வெளியே வருவார்.


மலையை சிவன் என்கிற புரணாம். அந்த மலை உச்சியில் மகாதீபத்தன்று ஏற்றப்படும் தீப ஒளியாக மலையில் இருந்து காட்சியளிக்கும் கடவுளை தரிசித்தால் போதும் என்பது பெரும்பான்மை மக்களின் எண்ணம். அதே நேரத்தில் கோயிலுக்குள் அமர்ந்து மலையில் ஏற்றப்படும் தீபத்தை காணும் அதே நேரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும்மே காட்சியளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க வேண்டும் என்பது வரலாறு அறிந்த பக்தர்களின் எண்ணம். அதற்காகவே மகாதீபத்தன்று கோயிலுக்குள் செல்ல முண்டியடிக்கிறார்கள் பக்தர்கள்.


ஒருக்காலத்தில் அர்த்தநாரீஸ்வரரை மகாதீபத்தன்று மக்கள் சுலபமாக தரிசித்தார்கள். காலப்போக்கில் இதில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டு, பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டன. இன்று கோயிலுக்குள் செல்லவே பெரும் சிபாரிசு தேவைப்படும் நிலைக்கு வந்துவிட்டது. கோயிலுக்குள் 8 ஆயிரம் பேர் அளவுக்கே இருக்க முடியும் என்கிறது பொதுப்பணித்துறை. இதற்காக பாஸ் அச்சடிக்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர். இந்த பாஸ் தருவதில் ஏக குளறுபடி நடந்து, விவகாரம் பெரியதாகி பின்னர் உயர்நீதிமன்றம் வழங்கிய வழிக்காட்டு உத்தரவில் பாஸ் வழங்குவதில் சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதோடு, புரோட்டாக்கால் ஒன்றையும் உருவாக்கியது. அதன்படி இப்போது பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.


தற்போது, கோயில் பணியை தங்களது குடும்ப பணியாக செய்யும் கட்டளைதாரர்கள் மற்றும் உபயதாரர்களுக்கு பாஸ் வழங்கப்படுகிறது. அரசு புரோட்டாக்கால்படி, நீதிபதிகள், முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், ஐ.ஏ.எஸ்கள், ஐ.பி.எஸ்கள் என பாஸ் தரப்படுகிறது. பின் 500 ரூபாய், 600 ரூபாய் பாஸ் என குறிப்பிட்ட அளவுக்கு பாஸ் கோயில் சார்பில் விற்கப்படுகிறது. இவர்களை தாண்டி ஓரளவு பொது பக்தர்கள் அனுமதிக்க வேண்டும் எனச்சொல்லியுள்ளது நீதிமன்றம்.


8 ஆயிரம் பேர் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என பொதுப்பணித்துறை சொன்னாலும் அந்தளவுக்கு அனுமதிப்பதில்லை என்பதே பெரும்பாலான பக்தர்களின் குற்றச்சாட்டு. மகாதீபத்தன்று கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், கட்டண பாஸ் வாங்கியவர்களை அதிகபட்சம் 4 மணிக்கே கோயிலுக்குள் வந்துவிட வேண்டும் என்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். 3 மணிக்கு வருபவர்களை கூட கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை. இதனால் கடந்த 15 ஆண்டுகலாக 1 மணிக்கே கோயிலுக்குள் செல்ல வரிசையில் நின்றுவிடுகிறார்கள் கட்டளைதாரர், உபயதாரர் பாஸ் வைத்துள்ள பக்தர்கள். பாஸ் இல்லாத பக்தர்களும் அப்படியே. அப்படி செல்பவர்களை கொடிமரம் சுற்றி எதிரே ஒருயிடத்தில் உட்காரவைத்துவிடுகிறார்கள். கட்டணம் செலுத்தி பாஸ் வாங்கியவர்களை சந்நிதானம் எதிரேயுள்ள கோயில் பிரகார கட்டிடங்கள் மேல் உட்கார வைத்துவிடுகிறார்கள்.


6 மணிக்கு ஏற்றப்படும் மகாதீபம், அதன்பின் சுவாமி ஊர்வலம் என 7 மணி வரை அவர்கள் அந்தயிடத்தை விட்டு எழுந்திருக்ககூட முடியாது. ஆத்திர அவரசத்துக்கு சிறுநீர் கழிக்க செல்ல வேண்டும் என்றாலும் கோயில் வளாகத்தில் எந்த வசதியும் கிடையாது. வெளியே சென்றால் மீண்டும் கோயிலுக்குள் திரும்பி வரவே முடியாது. இதனால் 5 மணி நேரத்துக்கும் மேலாக சிறுநீரை அடக்கிக்கொண்டு உட்கார்ந்துயிருக்க வேண்டிய நிலைமை.


யாராக இருந்தாலும் 4 மணிக்குள் வந்துவிட வேண்டும் எனச்சொல்லும் நிர்வாகம், புரோட்டாக்காலில் உள்ளவர்களுக்கு அந்த கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. 6 மணி மகாதீபம் என்றால் 5 மணிக்கே பக்தி பரவசத்தில் கோயில் மூழ்கிவிடும். அப்படிப்பட்ட நிலையில் தான் மாவட்ட ஆட்சியர் முதல் உயர்நீதிமன்ற நீதிபதிகள் வரை கோயிலுக்குள் தங்களது குடும்பத்தோடு வரத்துவங்குவார்கள்.


அவர்களுக்கென தனித்தனியாக நாற்காலி போடப்பட்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுயிருக்கும். குறிப்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் அவர்களது குடும்பத்தார் கொடிமரத்தின் இடதுபுறம்முள்ள பழைய உள்துறை அலுவலம் வாசல் பகுதியில் அமர்ந்து தீபத்தை காண்பார்கள். உயர்நீதிமன்ற நீதிபதிகள் குடும்பம், மாவட்ட நீதிபதிகள் குடும்பம், மாவட்ட ஆட்சியர் குடும்பம், வருவாய்த்துறை உயர் அதிகாரிகள் குடும்பம், தலைமை செயலாக அதிகாரிகள் குடும்பம் அமர மடப்பள்ளி மேல்மாடி ஒதுக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து அவர்கள் கடவுளை தரிசிப்பார்கள்.


ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தார் அமர அதே மடப்பள்ளியின் மேல்மாடி மற்றொருயிடத்தில் இடம் ஒதுக்கப்பட்டு நாற்காலிகள் போடப்பட்டு அங்கிருந்து அவர்கள் தரிசிப்பார்கள். பணம் தந்து பாஸ் வாங்கியவர்கள், கட்டளைதாரர்கள், உபயதாரர்கள் எல்லாம் தரையில் அமர்ந்து கடவுளை தரிசிப்பார்கள்.



தீபத்தன்று சில ஆண்டுகளாக திடீர் திடீரென மழை வந்துவிடுகிறது. அப்படி மழை வரும்போது, உள்துறை அலுவலக பகுதியில் அமர்ந்து கடவுளை தரிசிக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் அவர்களது குடும்பத்தார் நனையாமல் இருப்பார்கள். ஆனால் மடப்பள்ளி கட்டிடத்தின் மேல் பகுதியில் அமரும் நீதிபதிகள், செயலாளர்கள், ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் குடும்பத்தினர், தொலைக்காட்சி நேரலை கேமராமேன்கள் உட்பட மற்றவர்கள் நனைவார்கள்.


தற்போது நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், தலைமை செயலக அதிகாரிகள் நனையாமல் இருக்க இந்த ஆண்டு மடப்பள்ளி கட்டிடத்தின் மேலே பிளாஸ்டிக் ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. ( ஐ.பி.எஸ் அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினர் தவிர ) அதில் சுமார் 50 பேருக்கு மேல் அமர முடியும். இனி எந்த மழை வந்தாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவர்கள் நனையாமல் அதன் உள்ளே இருந்தபடி தீபத்தையும், அர்த்தநாரீஸ்வரரையும் தரிசிக்க உள்ளார்கள்.


கோயிலுக்காக காலம் காலம்மாக சேவை செய்யும் கட்டளைதாரர்கள், உபயதாரர்கள், பணம் தந்து பாஸ் வாங்கியவர்கள் மழையில் நனைந்தபடி தரிசிக்க உள்ளார்கள். இவர்களும் சக மனிதர்கள் தான். அதிகாரிகள் நனைந்தால் சலி புடிக்கும், காய்ச்சல் வரும் என நினைப்பவர்கள், அதே பக்தர்கள் நனைந்தால் அதுயெல்லாம் வராதா என கேள்வி எழுப்ப தோன்றுகிறது.



அதேபோல் மகாதீபம் ஏற்றப்பட்டவுடன் உடனடியாக இந்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உட்பட அதிகார வர்க்கத்தினர் உடனடியாக சாமியை தரிசனம் செய்யவைக்கின்றனர். அதன்பின் உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்லப்பட்டு, கோயில் மதில்சுவர் வரை அனுமதிக்கப்படும் இந்த அதிகார வர்க்கத்தினர் கார்களுக்கு சென்று அங்கிருந்து உடனடியாக தாங்கள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கு காவல்துறை அதிகாரிகளின் பாதுகாப்போடு அழைத்து செல்லப்படுகிறார்கள். இப்படி இவர்கள் செல்லும் பாதை கிரிவலப்பாதை. மகாதீபம் ஏற்றப்பட்டதும், கூட்டம் அதிகமாக இருக்கும், அந்த நேரத்தில் பக்தர்களை நிறுத்தி பெரும் தொந்தரவு செய்யும் காவல்துறை இந்த அதிகாரிகளை அனுப்பிவைக்கின்றனர். இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கும், காவல்துறை பாதுகாப்பில் உள்ளவர்கள் சிலரின் அவமானத்துக்கும் ஆளாகின்றனர் என்பது தொடர்கதையாகவுள்ளது.


அதிகாரவர்க்கத்தின் இந்த பாகுபாட்டை, அத்துமீறல்களைத்தான் கடந்த சில வருடங்களாக நக்கீரன் சுட்டிக்காட்டி வருவதோடு, தீபத்திருவிழா என்பது அதிகார வர்க்கத்தினருக்கான விழாவாக மாற்றப்பட்டு வருகிறது. இன்னும் சில ஆண்டுகள் சென்றால் பொதுமக்களை உள்ளே அனுமதிக்கமாட்டார்கள் என்கிறது. இதுவரை அதை மறைமுகமாக செய்து வந்த அதிகாரவர்க்கம், தற்போது வெளிப்படையாக செய்கிறது. மழை வருகிறது என்பதால் இன்று ஷெட் போட்டவர்கள், அடுத்து வரும் வருடங்களில் வெய்யில் அடித்தால் ஏசி போட்டுக்கொள்வார்களா என கேள்வி எழுப்புகின்றனர் அண்ணாமலையார் பக்தர்கள்.

 
தொடர்ச்சியாக அதிகாரத்தோடு செயல்படுபவர்களை உள்ளுர் மக்களும், அண்ணாமலையார் பக்தர்களும் வேதனையுடன் பார்க்கின்றனர்.

சார்ந்த செய்திகள்