திருவண்ணாமலையின் கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு கிரிவலம் நடத்தப்பட்டு வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் இந்தத் தீபத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான பரணி தீபம் ஏற்றும் மகா தீபம் ஏற்றுதல் வரும் 26 ஆம் தேதி நடைபெற இருக்கின்ற நிலையில், இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் தீபத் திருவிழாவின் முதல் நிகழ்வான கொடியேற்றத் திருவிழா இன்று நடைபெற்றது. 64 அடி உயரத் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடத்தப்பட்டது. தீபத் திருவிழாவின் போது சுவாமி வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படும் புதிய குடைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கார்த்திகை தீப விழாவின் 10 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். வெகு விமரிசையாக நடைபெற இருக்கும் தீபத் திருவிழாவிற்கு மாவட்ட நிர்வாகம் பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.