திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம் இயந்திரங்கள் உடைக்கப்பட்டு 72.5 லட்ச ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டது. இந்த கொள்ளை குற்றவாளிகள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்கிறது காவல்துறை. ஹரியானா மாநிலத்தில் ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து திருடுவதில் பயிற்சி பெற்ற குற்றவாளிகள் உள்ளார்கள். அவர்கள் இந்தியா முழுவதும் சென்று திருடுவார்கள் என்கிறார்கள். கொள்ளை குற்றவாளிகளை பிடிக்க 5 எஸ்.பிக்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிசிடிவி கேமரா பதிவுகள் ஆய்வு, வடமாநிலத்துக்கு ஒரு டீம் பயணம், செல்போன் பதிவுகள் ஆய்வு, வங்கி ஏ.டி.எம் ஏஜென்சி டீமில் இருப்பவர்களிடம் விசாரணை என சென்று கொண்டு இருக்கிறது. என்ன விசாரணை நடத்தினாலும் பெரிய அளவில் எந்த துப்பும் கிடைக்காமல் போலீசார் திணறி வருகின்றனர்.
அந்தளவுக்கு பக்காவாக ப்ளான் போட்டு திருடி உள்ளார்கள். சந்தேகத்துக்குரிய வகையிலான வாகனங்கள் ஏதும் திருவண்ணாமலையில் உள்ள டோல்கேட், திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் கண்ணமங்களம் அருகில் உள்ள டோல்கேட் கண்காணிப்பு கேமராவில் பதிவாகவில்லை. கிராமப்புற சாலைகளை பயன்படுத்தியுள்ளார்கள். இந்த டீம் சிலமுறை திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒத்திகை பார்த்துள்ளனர். எந்தெந்த ஏடிஎம்களில் கொள்ளை அடிக்கலாம், எந்த சாலை வழியாக சென்றால் கண்காணிப்பு கேமராவில் சிக்கமாட்டோம் என்பதெல்லாம் பார்த்து ரூட் போட்டுள்ளார்கள். திருடன் எங்காவது தடயத்தை விட்டுச் செல்வான் என்கிற குற்றவியல் விதிகளின்படி எங்காவது கிராமப்புற சாலைகள் அல்லது திருடு நடைபெற்ற இடங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களில் சிக்குவார்கள் என அதனையும் ஆய்வு செய்து வருகின்றனர். பணம் கொள்ளையடிக்கப்பட்ட பின்னர் கார் போன்ற வாகனங்களை பயன்படுத்தாமல் பொது போக்குவரத்தை பயன்படுத்தி தப்பி இருந்தால் என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் என காவல்துறை தரப்பில் செய்திகள் சொல்லப்பட்டாலும் குற்றவாளிகளை நெருங்கவில்லை என்பது தான் இப்போது வரையிலான நிலையாக உள்ளது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட யாராவது சிக்கினால் மட்டுமே இந்த கொள்ளையில் எத்தனை பேர் ஈடுபட்டார்கள்? எப்படி திட்டமிட்டார்கள்? அவர்கள் தமிழ்நாடா? பிற மாநிலமா? இதற்காக எத்தனை முறை திருவண்ணாமலை வந்தார்கள் என்ற விவரங்கள் தெரியவரும்.