சென்னை திருவான்மியூரில் பட்டப்பகலில் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கண்ணகி நகர் பகுதியைச் சேர்ந்தவர் டில்லிபாபு (35). இவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக இருந்துள்ளார். ரவுடியாக இருந்த டில்லி பாபு திருந்தி சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
பேட்டரி வாகனம் மூலம் குப்பைகளைச் சேகரித்துக் கொண்டு செல்லும் பணியை இவர் மேற்கொண்டு வந்தார். இன்று வழக்கம்போல பணியை முடித்துவிட்டு பேட்டரி வாகனத்தை விடுவதற்காக திருவான்மியூர் எல்.வி. சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது மறைந்திருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் அவருடைய வாகனத்தை இடைமறித்து அவரைக் கீழே இறக்கி சரமாரியாகக் கத்தியால் வெட்டி பட்டப் பகலிலேயே படுகொலை செய்துவிட்டுத் தப்பித்தனர்.
ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த டில்லிபாபுவை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து திருவான்மியூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தியதில், உயிரிழந்த டில்லி பாபுவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த அருண் என்ற நபருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது தெரியவந்தது. டில்லி பாபு ரவுடியாக இருந்து திருந்தி தற்பொழுது தூய்மைப் பணியாளராக ஒப்பந்தப் பணியில் இருந்த நிலையில், அருண் செய்யும் தவறுகளை காவல்துறைக்கு இவர் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்கனவே இருந்த முன்விரோதம் அதிகரித்துள்ளது. இந்த முன் விரோதத்தின் காரணமாக டில்லி பாபுவை அருண் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக நவீன், குபேரன் ஆகிய இரண்டு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அருண் உள்ளிட்ட மற்ற ஒருவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். திருவான்மியூரில் பட்டப் பகலிலேயே தூய்மைப் பணியாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.