சென்னை மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர்பேட்டை சாலையில், குடிநீர் குழாய் பராமரிப்பு பணிக்காக சாலையின் நடுவே சுமார் 6 அடி ஆழத்திற்கு இரண்டு குழிகள் தோண்டப்பட்ட நிலையில், பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படாமல், குழியும் மூடப்படாமல் இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள திருவள்ளுவர்பேட்டையில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தங்களது தண்ணீர் தேவைகளுக்காக மாநகராட்சி நீரையே இப்பகுதி மக்கள் பெரிதும் சார்ந்திருந்த நிலையில், கடந்த 2017 ஆம் புயலுக்கு பின்பு இப்பகுதியில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளது. இதனையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக அருகிலுள்ள தெருக்களுக்கு சென்றே நீர் எடுத்துவர வேண்டிய நிலை அங்கு நிலவி வந்துள்ளது.
இந்த நிலையில், நவம்பர் 4 ஆம் தேதி அன்று இப்பகுதிக்கு வந்த மாநகராட்சியின் ஒப்பந்த பணியாளர்கள், திருவள்ளுவர் பேட்டை சாலையின் இரண்டு இடங்களில் சுமார் 6 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டியுள்ளனர். சாலையில் பள்ளம் தோண்டப்பட்டு நீர் செல்லும் குழாய்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், குழாயில் இருக்கும் அடைப்பை சரி செய்து, பராமரிப்பு பணிகளை செய்ய 'ஜெட் ராடர்' இயந்திரம் தேவைப்படும் என அங்கு வந்த நபர்கள் கூறியதுடன், நவம்பர் 5 ஆம் தேதி அந்த இயந்திரம் வந்து பராமரிப்பு பணிகள் முடிவடையும் என கூறியுள்ளனர். ஆனால் ஒரு வாரம் கடந்த நிலையில், குழாயை சரிசெய்யும் பணி நடைபெறவில்லை. அதேநேரம் சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் அப்படியே விடப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அப்பகுதியை கடப்பதற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். நீர் விநியோகத்தை தொடங்குவதற்காக இந்த பராமரிப்பு பணியை விரைந்து முடித்து, சாலையில் தோண்டப்பட்டுள்ள பள்ளங்களை மூட வேண்டும் என மாநகராட்சிக்கு புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்கின்றனர் அப்பகுதி மக்கள். தமிழகத்தில் பருவமழை ஆரம்பித்துள்ள நிலையில், சாலையின் நடுவே பள்ளங்களை தோண்டி வைத்துவிட்டு மாநகராட்சி ஊழியர்கள் அதனை மூடாமல் அலட்சியம் காட்டி வருவது திருவள்ளுவர் பேட்டை பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.