கோடை காலத்தில் தமிழகத்தில் அதிகப்படியான வெயில் நிலவும் மாவட்டம் வேலூர். இந்த ஆண்டு அதிகபட்சமாக 111 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் கொளுத்தி வருகிறது. வேலூர் மாவட்டம் தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஒரு வறட்சியான பகுதியும் கூட. இந்தாண்டு கொளுத்தும் கோடை வெயிலால் மாவட்டத்தின் பல வனப்பகுதிகள் காய்ந்து, வறண்டு போயுள்ளது. இதனால் வனவிலங்குகள் தண்ணீருக்காக அல்லல்படும் நிலை உருவாகியுள்ளது. ஒரு சில வனப்பகுதிகளில் வனத்துறை சார்பில் தொட்டி அமைத்து நீர் ஊற்றப்பட்டு வருகிறது. அது பற்றாமல் வனவிலங்குகள் காட்டைவிட்டு வெளியே வந்து அலைகின்றன.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிக்கு செலுத்தப்படும் ஊசி மற்றும் குளுக்கோஸ் பாட்டில்கள் திறந்தவெளியில் சேமித்து வைத்துள்ளனர். வெயிலின் தாக்கத்தால் தண்ணீர் என நினைத்து நோயாளிக்கு செலுத்திய குளுக்கோஸ் பாட்டிலில் உள்ள குளுக்கோஸ்களை குரங்குகள் குடிக்கின்றன.
தமிழக ஆந்திர எல்லையில் உள்ள பேர்ணாம்பட்டில் இருந்து கர்நாடகா மாநிலம் கே.ஜி.எப் செல்லும் சாலையில் அமைந்துள்ளது பத்தலப்பல்லி. இது சோதனைச்சாவடியை ஒட்டிய வனப்பகுதி. இது கடுமையான வறட்சி காரணமாக காய்ந்து போயுள்ளது இதனால் இங்கு வசிக்கும் குரங்கு கூட்டங்கள் உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் மிகுந்த அவதித்தட்டு வந்துள்ளது. இதனைப் பார்த்த பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீத் என்பவர் குரங்குகளுக்கு தண்ணீர் வைக்க முடிவு செய்து தனது சொந்த செலவில் சிமெண்ட் தொட்டிகளை வாங்கி அதை வனப்பகுதிகளில் வைத்து வேன் மூலமாக தண்ணீர் கொண்டு சென்று உற்றி வருகிறார். இதனால் குரங்குள் தண்ணீரை குடித்தும் அதில் குளித்தும் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல் அப்துல்ஹமீது அவ்வப்போது குரங்குகளுக்கு உணவையும் வழங்கி வருகிறார்.