'நிவர்' புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர், மயிலாடுதுறை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் 'நிவர்' புயலானது அதி தீவிர புயலாக வலுவடைந்து இன்றிரவு அல்லது அதிகாலை காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் எடுத்துள்ளனர். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தொடர்மழை காரணமாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இந்த நிலையில் 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை எட்டுவதால் முன்னெச்சரிக்கையாக இன்று நண்பகல் 12.00 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்படும் என்று உதவிப்பொறியாளரும், வெள்ள கட்டுப்பாட்டு அலுவலருமான பாபு அறிவித்துள்ளார். மேலும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்துக்கேற்ப படிப்படியாக நீர் வெளியேற்றம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறக்கப்படும் நிலையில், ஏரியை சுற்றியுள்ள சிறுகளத்தூர், குன்றத்தூர், காவனூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 4,027 கனஅடி தண்ணீர் வந்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.