தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்திற்கு வந்திருந்த கும்பகோணம் ஜோதிமலை இறைப்பணி திருக்கூட்டம் நிறுவனர் தவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் புதிதாகத் திறக்கப்பட்ட இந்திய நாடாளுமன்ற புதிய கட்டடத் திறப்பு விழாவில், 1947ல் திருவாவடுதுறை ஆதீனம் மூலம் வழங்கப்பட்ட செங்கோலை வைப்பது மற்றும் மடாதிபதிகள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்வது குறித்த தனது கருத்துக்களைத் தெரிவித்தார்.
அப்போது அவர் கூறுகையில் "சைவ சமயம் சார்ந்தவன் என்கின்ற பார்வையில் பார்க்கும்போது, ஆதீனம் வழங்கிய செங்கோலை வைப்பது, தேவாரம் பாடுவது போன்றவை மகிழ்ச்சி அளித்தாலும், மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட ஒரு மதத்தின் அடையாளமான சின்னங்களை முதன்மைப்படுத்தி நிறுவுவதும் வழிபாடுகள் மேற்கொள்வதும் ஏற்புடையதல்ல. இது சகோதர சமயங்களைச் சார்ந்த மற்றவர்களின் மனதை பாதிக்கும். இதில் கலந்து கொள்ளும் மடாதிபதிகள் செங்கோலுடன் ஒரு புதிய வேலும் பிரதமருக்கு வழங்க இருப்பதாக அறிகிறோம். வேலன்று வென்றி தருவது மன்னவன் கோல்அதுவும் கோடாது எனின் (திருக்குறள்- 546). மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்ததானால் அதுவே வெற்றி அளிப்பதாகும். செங்கோன்மை என்னும் அதிகாரத்தில் இந்த கருத்துக்களை பதிவு செய்கிறார் திருவள்ளுவர்.
நாம் வழங்கும் வேலும் கோலும் ஒரு மன்னனின் சிறப்பைச் சொல்லாது. அவன் செய்கின்ற நடுநிலையான ஆட்சியாகிய செங்கோன்மைதான் சிறப்பை தருவதாகும். இங்கு சிறுபான்மையினரை மதிக்காமல் ஒருதலைபட்சமாக நடக்கும் போது செங்கோன்மை தோல்வியடைகிறது. "அதுவும் கோடாது எனின்" என்றதன் மூலமாக, செங்கோல் என்கின்ற வடிவிலான குச்சிகளைப் புறந்தள்ளுகிறார் வள்ளுவர். திருவாவடுதுறை ஆதீனத்திலிருந்து செங்கோல் வழங்கியதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அது மிகுந்த பரபரப்புக்கிடையே அந்த நேரத்தில் ஒரு வாழ்த்துக்களை தெரிவிக்கும் பரிசாகத்தான் இருந்ததே தவிர, இப்படித்தான் சுதந்திரம் வழங்கப்பட்டது என்பதற்கான ஆவணங்கள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இந்த செங்கோலை ஒரு வாக்கிங் ஸ்டிக் போல வைத்திருந்தார்கள் என்று சொல்லும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த எட்டு ஆண்டுகளாக இந்த வாக்கிங் ஸ்டிக்கை கவனிக்காதது ஏன். தென்னகத்தில் அரசியலை வளர்க்கும் முகமாக இந்த முன்னெடுப்பை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். எதுவும் மக்களிடையே எடுபடாது. அதிகாரம் கையில் இருக்கிறது என்பதற்காக, மதச்சார்பற்ற ஜனநாயக நாட்டில் ஒருதலைபட்சமாக இதுபோன்ற செயல்களை செய்வது வருத்தத்திற்குரியது. சமய, சமூக நல்லிணக்கத்தோடு மக்கள் வாழ்ந்து வரும் இந்திய நாட்டில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மதக் கலவரங்களுக்கு திட்டமிடுகிறார்களோ என்று தோன்றுகிறது. பரஸ்பரம் அன்பும் அமைதியும் ஒற்றுமையும் நின்று நிலைபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.