பெங்களூருவில் இருந்து தனது குடும்பத்தினருடன் வேலூரை நோக்கி பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேலூர் சி.எம்.சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரத்த நாளவியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றும் மருத்துவர் சுனில் அகர்வால் வந்துக்கொண்டிருந்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கேத்தாண்டபட்டி என்ற இடத்தின் அருகே வரும்போது, கார் பின் பக்க டயர் வெடித்து ஓட்டுனரின் கட்டுபாட்டை இழுந்த கார் தடுப்பு சுவற்றில் மோதி சாலை நடுவில் கார் தலை கீழாக கவிழ்ந்தது, இதில் பயணம் செய்த மருத்துவர், அவரது மனைவி மற்றும் ஓட்டுநர் உட்பட 3 பேர் பலத்த படுகாயம் அடைந்தனர். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கூறி ஆம்புலன்ஸ் வரவைத்து வாணியம்பாடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவர்களை வரவைத்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாட்றம்பள்ளி போலீசார் காரை ஓரம் கட்டி போக்குவரத்தை சரி செய்து, விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் இருந்து மேல் சிசிக்சைக்காக மருத்துவர் சுனில் அகர்வால் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி பலியானார். காயம் அடைந்த பெண் மற்றும் காரின் ஓட்டுநர் ஆகிய இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இறந்த மருத்துவர் அகர்வால் பூர்வீகம் டெல்லியாகும். 1972ல் அவர் வேலூர் சி.எம்.சிக்கு மருத்துவம் படிக்க வந்து, எம்.பி.பி.எஸ், எம்.எஸ் படித்து, அங்கேயே பணியாற்ற துவங்கினார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் வேலூரிலேயே வாழ்ந்துவிட்டதால் அவரது உடல் வேலூர் பாலாற்றங்கரையில் அடக்கம் செய்வது என அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர் என்கின்றனர் மருத்துவமனை தரப்பில்.