நாகையில் பிரசித்தி பெற்ற கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் சித்தர்கள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள ஜப்பானியர்கள், தியானத்தில் ஈடுபட்டு சீர்வரிசையோடு வந்து வழிபாடு செய்தனர்.
நாகை மாவட்டம், வடக்கு பொய்கை நல்லூரில் உள்ள கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி அடைந்த ஆசிரமத்தில் பரணி விழா மற்றும் பௌர்ணமி விழா நேற்று தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சித்தர்களின் வாழ்க்கை முறை, மருத்துவம் பற்றி அறிந்த ஜப்பானியர்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்ளவும், ஆராய்ச்சி செய்வதற்காகவும் தக்காயிகி என்கிற பால கும்ப குருமணி என்ற ஜப்பானியர் தலைமையில் ஆன்மீகத் தேடல் என்கிற பெயரில் ஆண்கள், பெண்கள் என 16 ஜப்பானியர்கள் தமிழகத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இன்று கோரக்கர் சித்தர் ஆசிரமத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்றனர்.
அப்போது ஆசிரமத்தில் தியானத்தில் ஈடுபட்ட ஜப்பானியர்கள் தொடர்ந்து சித்தருக்கு பூஜை செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் யாகசாலை பொருட்களை சீர்வரிசையாக எடுத்துச் சென்று கோரக்கர் சித்தரை வணங்கி வழிபாடு நடத்தினர். மேலும், ஜப்பானியர்கள் ஆசிரம நிர்வாகிகளிடம் கோரக்கர் சித்தர் உள்ளிட்ட சித்தர்கள் பற்றிய வாழ்க்கை முறைகளை கேட்டறிந்து வழிபாடு செய்தனர். அவர்களுக்கு ஆலயத்தின் சார்பில் மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆன்மீகத் தேடலுக்காக வருகை புரிந்துள்ளதாகவும், முக்கியமாக இங்கு வாழ்ந்த சித்தர்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்துக் கொள்வதற்காகவும், அதன் ஆராய்ச்சிக்காகவும் இங்கு வந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.