இராணிப்பேட்டை மாவட்டத்தில் இராணிப்பேட்டை, ஆற்காடு தொகுதிகளின் பல இடங்களில் மினி கிளினிக் திறந்து வைக்கவும், அரசின் நலத்திட்டங்கள் வழங்கவும் அமைச்சர் கே.சி.வீரமணி டிசம்பர் 18-ஆம் தேதி இராணிப்பேட்டை வந்துள்ளார்.
இராணிப்பேட்டை அடுத்த மோசூர் கிராமத்தின் வழியாக அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கார்கள் செல்லும்போது, மோசூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என சுமார் 100 பேர் அமைச்சரின் காரை வழிமறித்து மடக்கியுள்ளனர். வேலூர் மாவட்டமாக இருக்கும்போதும், இப்போது இராணிப்பேட்டை மாவட்டமாக இருக்கும் நிலையிலும் எங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரவில்லை.
தண்ணீர் சரியாக வரவில்லை, தெருவிளக்குள் எரியவில்லை, கால்வாய் தூர்வாரவில்லை. இதுபற்றி நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது தேர்தல் வருகிறது என்றதும் இங்கு வந்து வாக்குறுதி தருகிறீர்களே, இதற்கு முன்பு ஏன் வரவில்லை எனக் கேள்வி எழுப்பினர். விரைவில் செய்து தருகிறேன் என அமைச்சர் சொல்லியும் பெண்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பின்பு அதிகாரிகள் மிரட்டி பெண்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து அமைச்சரும், அதிகாரிகளும் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செல்லும் நிகழ்ச்சிகளுக்கு முன்பே அந்தப் பகுதிக்கு, பயண வழியில் உள்ள கிராமங்களுக்குச் சென்ற போலீஸார், மக்கள் என்ன மனநிலையில் உள்ளார்கள் என விசாரித்து அதன்பின் அமைச்சருக்குத் தகவல் சொல்லி அவரை வரவைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.