திருப்பதியில் நேற்று ஜூலை ஆறாம் தேதி மதியம் 12 மணியளவில் மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயில் முன் நின்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்க, 8 வழி சாலை திட்டத்தை கைவிடுக என கோசம் வைத்தார் முகிலன். இதை பார்த்த திருப்பதி ரயில்வே போலீசார் முகிலனை தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தி பிளாட்பாமுக்கு அழைத்து வந்துள்ளனர்.
அங்கிருந்து அவரை ரயில்வே போலீசாரின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லும் பொழுது ஜோலார்பேட்டையில் இருந்து ராஜமுந்திரி ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த முகிலனின் நண்பர் சண்முகம் என்பவர் இதனை பார்த்துவிட்டு உடனடியாக இது தொடர்பாக அவரது மனைவிக்கும், அவரது நண்பர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலை தொடர்ந்து அவர்கள் தமிழக போலீசாரிடம் விவரம் கேட்டுள்ளனர்.
எங்களுக்கு அது பற்றி தெரியாது விசாரிக்கிறோம் என தமிழக போலீசாரும் தெரிவித்தனர். அதன்பின் தமிழக போலீசார் திருப்பதி போலீசாரை தொடர்பு கொண்டு முகிலனை பற்றி தகவல் கேட்டுள்ளனர். திருப்பதி எஸ்பி எங்களுக்கு அது போன்ற தகவல் கிடைக்கவில்லை எனக் கூறியுள்ளனர். அதனையடுத்து திருப்பதி போலீசார் ரயில்வே போலீசாரிடம் இதுகுறித்து கேட்டபோது, இன்று மூன்று பேரை மட்டும் கைது செய்துள்ளோம். அவர்களை நெல்லூர் நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்து உள்ளோம் என தகவல் கூறியுள்ளனர். வேற யாரையாவது கைது செய்துள்ளீர்களா என விசாரித்தபோது ஒரே ஒரு நபரை பிடித்து வைத்துள்ளோம் அவர் பார்ப்பதற்கு மனநலம் பாதிக்கப்பட்டது போல் உள்ளார். அவரை நாங்கள் காட்பாடிக்கு அனுப்பியுள்ளதாக கூறியுள்ளனர்.
இதுபற்றி திருப்பதி எஸ்பி சைத்தையா கூறும் பொழுது, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார், தமிழில் மட்டுமே பேசினார் அவரிடம் விசாரித்த பொழுது என்னை காட்பாடியில் கொண்டு சென்று விட்டு விடுங்கள் என சொன்னார், மதியம் அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்ததும் சாப்பிட்டுவிட்டு உறங்கிவிட்டார். இப்பொழுது திருப்பதியில் இருந்து காட்பாடி பயணிகள் ரயிலில் அவரை அனுப்பி வைத்துள்ளோம் என தகவல் கூறியுள்ளார்.
அதன் பின்னே காட்பாடிக்கு முகிலன் வருவதை உறுதி செய்துகொண்ட தமிழக போலீசார் அவரை காட்பாடி ரயில்வே போலீசாரிடம் இருந்து மீட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவ பரிசோதனை முடிந்ததும் தற்போது சென்னை சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணையில், திருப்பதியில் கண்டுபிடிக்கப்பட்ட முகிலனை நாய் கடித்துள்ளதாக சிபிசிஐடி விசாரணையில் தகவல் வந்துள்ளது. அடுக்கம்பாறை மருத்துவமனையில் முகிலனை பரிசோதித்தபோது நாய் கடித்ததற்கான காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் மருத்துவ சோதனையின் போது ஒரு வாரத்திற்கு முன்புதான் நாய் கடித்ததாக மருத்துவரிடம் முகிலன் கூறியுள்ளதாகவும் சிபிசிஐடி விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.