சிதம்பரம் நகரைச் சேர்ந்த பொற்கொல்லர் முத்துக்குமரன். இவர் இளமையாக்கினார் தெருவில் தங்க நகைகள் செய்யும் தொழில் கூடம் வைத்துள்ளார். இவர் சிறுவயது முதல் தங்க நகைகளை கைத்தொழில் மூலம் செய்வது மிகவும் குறைந்து வருவதால் கைத்தொழிலில் மட்டும் தான் மிக நுட்பமான நகைகளை செய்யமுடியும் என்றும் அவ்வபோது மிகவும் குறைவான எடை கொண்ட தங்கத்தில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பொருட்களை செய்து வருகிறார்.
இவர் இதுவரை தாஜ்மஹால், சிதம்பரம் நடராஜர் கோவிலின் பொற்கூரை, மின்விசிறி, கை விசை பம்பு, வேளாங்கண்ணி கோயில், தொட்டில் குழந்தை திட்ட விழிப்புணர்வுக்கு தங்க தொட்டில், மூக்கு கண்ணாடி, சிவலிங்கம், நடராஜர் கோயிலின் நான்கு கோபுரங்கள், கிரிகெட் விளையாட்டின் உயரிய விருதான உலக கோப்பை உள்ளிட்ட பொருட்களை மிக குறைந்த எடைகொண்ட தங்கத்தில் சிறிய அளவில் செய்து சாதனை செய்துள்ளார்.
இந்நிலையில் வரும் 2020 ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக 12 சீட்டுகள் கொண்ட 2020-ஆம் ஆண்டு மாத காலண்டரை 660 மில்லி தங்கத்தில் வடிவமைத்துள்ளார். இதன் நீளம் 18 மில்லி மீட்டர், அகலம் 12 மில்லி மீட்டராக உள்ளது. இதனை 3 மணி நேரத்தில் வடிவமைத்துள்ள அவர் காலண்டரில் முக்கிய பண்டிகை தினங்களை குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 2000-ம் ஆண்டில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் 2020ஆம் ஆண்டு வல்லரசாக மாறும் இதனை விஷன் 20 ஆண்டாக கொண்டாட கனவு காணுங்கள் என்று கூறியிருந்தார். அதனையொட்டி இந்த ஆண்டை வரவேற்கும் விதமாக இதனை செய்துள்ளேன்.
இதேபோல் பல பொருட்களை சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்துவருகிறேன். கைத்தொழில் மூலம் தங்க நகை உள்ளிட்ட பொருட்களை செய்வதை ஊக்கபடுத்தும் விதமாக இதுபோன்று செய்பவர்களுக்கு அரசு அங்கீகாரம் அளித்து சான்று வழங்க வேண்டும் என்றும் கூறினார்.