சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் இனியும் தேவையா நீட் என்ற தலைப்பில் ஒன்றிய அரசை நீட் தேர்வு ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கி.வீரமணி, திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ், இளங்கோவன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி ராமகிருஷ்ணன், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதில் பேசிய திருமாவளவன் எம்.பி, “நீட் தேர்வில் குளறுபடி ஏற்பட்டிருப்பதால் ரத்து செய்யக் கூறவில்லை. நீட் தேர்வில் குளறுபடிகள் இருப்பதாலும், சமூகநீதி பாதிக்கப்படுகிறது என்பதாலும் தான் எதிர்க்கிறோம். மாநில அரசு அதிகாரம் பறிக்கப்படுகிறது. சமூகநீதி கோட்பாட்டிற்கு எதிரானதாக உள்ளது. விளிம்பு நிலை மக்கள் மீது இப்படிப்பட்ட தாக்குதலை தொடுக்கக் கூடாது எனவே நீட் வேண்டாம். 720 க்கு 720 / 719 / 718 மார்க எப்படி வந்தன? கோடிக்கணக்கான ரூபாய் நீட் தேர்வு தொடர்பான ஊழல் முறைகேட்டில் புழக்கத்தில் உள்ளன. நீட் பயிற்சி அளிக்கின்ற மையங்கள் கோடி கோடியாய் கொள்ளை அடிக்கின்றன. மத்திய அரசு மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் கல்வி தொடர்பான அதிகாரத்தை எடுத்துக் கொள்கிற ஆதிக்க போக்கை கண்டிக்கிறோம். நீட்டுக்கு முன் ஒரே ஒரு சதவீதம் மட்டுமே சிபிஎஸ்சி மாணவர்கள் தேர்ச்சி பெற முடிந்த நிலையில் நீட்டுக்கு பிறகு 60% பேர் ஆக மாறியுள்ளது. ஆனால் அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி தற்போது இரண்டு சதவீதத்திற்கும் கீழே அமைந்துள்ளது.
நீட் தேர்வு சிபிஎஸ்சி மற்றும் வசதிப் படைத்த மாணவர்களுக்கு சாதகமாக உள்ளது. இந்தியாவில் OBC சமூக தலைவர்கள் தங்களை வளர்க்கவும், பாதுகாத்துக் கொள்ளவும் பாஜகவை ஆதரிக்கிறார்கள். சந்திரபாபு மூலம் ஆந்திராவிலும், எடியூரப்பா மூலம் கர்நாடகாவிலும், சுரேஷ் கோபி மூலம் கேரளாவிலும் கால் பதித்துள்ளனர். அவர்கள் குதிங்கால் பதிக்காத இடம் தமிழ்நாடு தான். இந்த நொடி வரை அதை சாதிக்கக்கூடிய சாதனையாளர்களாகத் தான் தமிழ்நாடு இருந்து வருகிறது. இந்தத் தேர்தலில் எப்படியாவது ஐந்து இடங்களை வெற்றி பெற்று விட வேண்டும் எனப் பாஜகவினர் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இப்போது அவர்கள் எங்கே ஒளிந்து கொண்டிருக்கிறார்கள் எனத் தெரியும். தமிழ்நாட்டு மக்களிடையே அந்தப் புரிதல் வலுவாக உள்ளது.
திமுக கூட்டணி பலத்தால் வென்று குவித்து விட்டோம் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. பாஜக, ஆர்.எஸ்.எஸ் சமூக நீதிக்கு எதிரானவர்கள் என்ற புரிதல், கருத்தியல் மக்களுக்கு கணிசமாக இருக்கிறது. பாஜக ஆர்எஸ்எஸ் சங்பரிவார் எதிர்ப்பு தமிழ் மண்ணில் ஆழமாகப் பதிந்துள்ளது. அதற்கு அடிப்படை பெரியார், திராவிடர் இயக்கங்கள் தான். இனி தமிழ்நாட்டு அரசியலுக்கு மட்டுமல்ல, இந்திய அரசியலுக்கும் மண்டலுக்கு முன் - மண்டலுக்கு பின் என்றுதான் பகுப்பு ஆய்வு செய்ய வேண்டியது இருக்கும். பாஜக கூட்டணியிலிருந்து யாரை இந்தியா கூட்டணி பக்கம் இழுக்கலாம் என்பதை விட இந்தியா கூட்டணியில் உள்ளவர்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது தான் அவசியம். இந்தியா கூட்டணியில் உள்ளவர்களை இழுப்பதற்காக மோடி, அமித்ஷா எல்லாவிதமான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள்.
மைனாரிட்டி அரசாக இதனைக் கொண்டு செல்ல நினைப்பார்கள் என்றெல்லாம் நாம் நினைக்க தேவையில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வருவதற்குக் கூட அவர்கள் முயற்சிப்பார்கள். நீட்டை ஒழிப்பதாக இருந்தாலும், சமூக நீதியைக் காப்பாற்றுவதற்கான கோணத்தில் சங்பரிவர்களை, அவர்களுக்கு எதிரான செயல் திட்டங்களை வரையறுப்பதுதான் நம் முன்னால் இருக்கக்கூடிய மிக முக்கியமான சவால்", என்றார்.