சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கடந்த 51 நாட்களாக, மற்ற அரசு மருத்துவக் கல்லூரியில் வசூலிக்கும் கல்வி கட்டணத்தை சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியிலும் வசூலிக்க வலியுறுத்தி தொடர்ந்து நூதன முறையில் அறவழியில் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் போராட்டத்தை தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில், கடந்த ஒரு வார காலமாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அமைதியான முறையில் நூதனமாக செய்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்களின் போராட்டத்தை ஒடுக்கும் விதமாக தமிழக அரசும், பல்கலைக்கழக நிர்வாகமும் மாணவர்களின் விடுதியில் உணவைத் தடை செய்தது. அதேபோல் மின்சாரம், குடிநீர் ஆகியவற்றையும் நிறுத்தியுள்ளது. இதனால் மாணவர்கள் தேசிய மனித உரிமைகள் ஆணையம் மற்றும் மகளிர் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மாணவர்களின் போராட்டத்திற்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், நேற்று (27.01.2021) திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களின் போராட்டக் களத்தில் இணையவழி வாயிலாக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, மாணவர்களின் போராட்டத்திற்கு திமுக எப்போதும் துணை நிற்கும் என்றும், மாணவர்களின் பிரச்சினைகள் குறித்து, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் திமுகவின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் குரல் கொடுப்பார்கள் என்றும் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
அதேபோல் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மாணவர்களுக்கு இணையவழியில் ஆறுதல் கூறினார். அப்போது மாணவர்களின் ஜனநாயக முறையான நியாயமான போராட்டத்தை தமிழக அரசு உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மாணவர்களின் போராட்டத்திற்கு தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவளிக்கும். மாணவர்கள் வெற்றி கிடைக்கும் வரை போராட வேண்டும். ஒருபுறம் விவசாயிகள் போராட்டம், மறுபுறம் மாணவர்கள் போராட்டம் மிகவும் வேதனை அளிக்கிறது. மாணவர்களுக்கு உணவு, குடிநீர், மின்சாரம் நிறுத்தியது மிகவும் கண்டனத்திற்குரியது. விரைவில் மாணவர்களை போராட்டக் களத்தில் சந்தித்துப் பேச உள்ளதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா மாணவர்களுக்கு ஆறுதல் கூறி பேசுகையில், “மருத்துவ மாணவர்கள் 50 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை அரசு அழைத்து பேசாதது பேராபத்தை விளைவிக்கும். எனவே தமிழக அரசு உடனடியாக மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். விடுதியில் உணவு, குடிநீர், மின்சாரம் தடை செய்ததை வன்மையாக மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. மாணவர்களின் போராட்டத்திற்கு அனைத்து விதத்திலும் மனிதநேய மக்கள் கட்சி உறுதுணையாக இருக்கும்,” என அவர் இணையவழியில் ஆதரவு தெரிவித்தார்.
ஆளுங்கட்சியை தவிர மற்ற அனைவரும் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆளுங்கட்சியினர் போராட்டத்தை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு முதல்வர் மற்றும் அமைச்சரிடம் அழைத்து செல்வதாக மாணவர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் மாணவர்களோ கடந்த 51 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள், ‘எந்த ஒரு தீர்வும் இல்லாமல் எப்படி போராட்டத்தை கைவிட முடியும்’ என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து இன்று (28.01.2021) தமிழ்நாடு டாக்டர்கள் சங்கம் மற்றும் மருத்துவர்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் அடையாள கருப்புக்கொடி ஏந்தி பணி செய்வது மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளனர்.