சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி தலைமையில் வேதாரண்யம் பகுதியில் அம்பேத்கர் சிலை உடைப்பை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் திருமாவளவன் செயத்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...
உலகத் தலைவர்களின் வரிசையில் போற்றப்படும் ஒரு மகத்தான தலைவர் புரட்சியாளர் அம்பேத்கர், உலகத்தின் பல்வேறு நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அவருடைய திருவுருவச் சிலையை திறந்து வைக்கிறார்கள்.
தமிழகத்தில் தலைவர்களின் சிலைகள் அவமதிப்பு நீண்டகாலமாகவே நீடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இம்மாதிரியான அவமதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்த சம்பவத்திற்கு காவல்துறையின் மெத்தன போக்கும், அரசின் அலட்சியமும்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மதவாத சக்திகள் தமிழகத்தை குறிவைத்து இதுபோல் சம்பவங்களுக்கு துண்டுதலாக இருக்கின்றனர், மேலும் தலைவர்களின் சிலைகளை வெண்கலத்தில் நிறுவவேண்டும். மேலும் சுங்கசாவடி கட்டண உயர்வை உடனடியாக அரசு திரும்ப பெற வேண்டும், இல்லை என்றால் மாபெரும் மக்கள் போராட்டம் வெடிக்கும் என்றார்.