விருதுநகர் மாவட்ட குடிநீர் வழங்கல் பணிகள் குறித்த அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்தில் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி
“ஆணையாளர்கள், நகராட்சி மற்றும் ஊரகப்பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் பயன்பெறும் பொதுமக்களுக்கு முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றனவா என்பதனையும், குடிநீர் விநியோகத்தினையும் தினசரி ஆய்வு செய்யவேண்டும். குடியிருப்பு பகுதிகளில் குடியிருப்புகள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் மற்றும் வணிக நோக்கில் செயல்படும் நிறுவனங்கள் ஆகியவற்றில் முறைகேடாக, அனுமதியின்றி குழாய் மூலம் குடிநீர் எடுத்துவருகின்றனர்.

குடிநீர் உறிஞ்சப்படும் மின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் குடிநீர் இணைப்பைத் துண்டித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் வழங்கும் பணியில் ஊராட்சி செயலாளர்கள் தனிக் கவனம் செலுத்தி, அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் கிடைக்குமாறு செய்திட வேண்டும். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள் தனி கவனம் செலுத்திட வேண்டும். மேலும், பொதுமக்களிடமிருந்து குடிநீர் விநியோகம் தொடர்பாக வரப்பெறும் புகார்களை 24 மணி நேரத்தில் பரிசீலனை செய்து, போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு, உடனடியாக நிவர்த்தி செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எனவே அனைத்து அரசு அலுவலர்களும் போர்க்கால அடிப்படையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தட்டுப்பாடின்றி சீரான குடிநீர் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
எதிர்பார்த்த அளவு தென்மேற்குப் பருவமழை பெய்யவில்லை. விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் என, விருதுநகர் மாவட்டம் முழுவதும் தற்போது குடிநீர் தட்டுப்பாடு அதிகளவில் இருக்கிறது. பொதுமக்கள் குடிநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பதை நகராட்சி ஊழியர்களோ, ஊராட்சி செயலர்களோ, கண்டுகொள்வதே இல்லை. அதனால்தான், மற்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.
குடிநீர் விநியோகப் பணிகளுக்காக அரசாங்கம் எவ்வவோ செய்துவருகிறது. அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால்தான், அரசாங்கத்தின் மீது மக்களின் கோபம் திரும்பிவிடுகிறது. ஊராட்சி செயலர்கள் எல்லோரும், உள்ளாட்சி பிரதிநிகள் இல்லாததால், அதிகாரத்தோடு நடந்துகொள்கின்றனர். குழாய் உடைப்பிலிருந்து மோட்டார் பழுதுவரை எந்தப் பிரச்சனையையும் அதிகாரிகள் தீர்ப்பதில்லை. இது செயற்கையாக உருவான தண்ணீர்ப்பஞ்சம்.” என்று ஒரேயடியாக அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தினார்.