இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள சோகனூர் எனும் கிராமத்தில் இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு அரசியல் முன்விரோதம் காரணம் என கூறப்படுகிறது. இதனைக் கண்டித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “அரக்கோணம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சோகனூரில் சாதிவெறியர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அர்ஜுனன், சூரியா ஆகிய இரண்டு தலித் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மூன்றுபேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் படுகொலைகளைச் செய்த சாதிவெறியர்கள் மற்றும் மணல் திருடர்களை உடனடியாகக் கைதுசெய்து குண்டர் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
இந்தப் படுகொலைகளைக் கண்டித்து எதிர்வரும் ஏப்ரல் 10 அன்று, தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகளின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதிமுகவின் காவேரிப்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலாளர் பழனி என்பவர் மணல் கடத்தலில் ஈடுபட்டு வந்துள்ளார். திருட்டு மணல் ஏற்றிய வாகனங்கள் தலித் குடியிருப்பின் வழியாக வந்தபோது அங்கிருந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் விசிக வேட்பாளர் கௌதம சன்னாவுக்கு ஆதரவாக பானை சின்னத்துக்கு அக்கிராம இளைஞர்கள் வாக்குகள் சேகரித்துள்ளனர். அத்துடன், பாமக ஆதரிக்கும் அதிமுக வேட்பாளரை ஊருக்குள் அனுமதிக்கவில்லை. இவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் சூழலைப் பயன்படுத்தி, பழனியின் மகன்களும் அதிமுக, பாமக சாதிவெறியர்களும் கூட்டுசேர்ந்து இந்தப் படுகொலையை நடத்தியுள்ளனர்.
வாக்குப்பதிவு முடிந்ததற்குப் பிறகு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் தலித்துகள் தாக்கப்பட்டுள்ளனர். தோல்வி பயத்தில் அதிமுக - பாஜக - பாமக கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் இறங்கியுள்ளனர். காட்டுமன்னார்கோயில், வானூர், திருப்போரூர், கிருஷ்ணகிரி மற்றும் அரியலூர் தொகுதிகளிலும்கூட தலுத்துகளுக்கு எதிரான வன்முறை வெறியாட்டங்கள் நிகழ்ந்துள்ளன.
தனது தனிப்பட்ட அரசியல் ஆதாயத்துக்காக எடப்பாடி பழனிசாமி சாதிவெறியர்களைத் தொடர்ந்து ஊக்குவித்து வந்ததோடு, தலித் மக்கள்மீதான தாக்குதல்களைக் கண்டும் காணாததுபோல் இருந்தார். அதன் விளைவே இந்தத் தாக்குதல்களும் படுகொலைகளும் இப்போது நடந்துள்ளன.
விசிக இடம்பெற்றுள்ள திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறப்போவதைத் தாங்க முடியாத மதவெறியர்களும் சாதிவெறியர்களும் தமிழ்நாட்டை சீர்குலைக்க மிகப்பெரிய சதி திட்டத்தைத் தீட்டியுள்ளனர் என்பதன் அடையாளமே இந்தப் படுகொலை” என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு கண்டனம் தெரிவித்து நாளை (10.04.21) தமிழகம் முழுக்க மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.