இன்று தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’இந்தியச் சமூகத்தில் காலம் காலமாய்ப் புரையோடிக்கிடக்கும் சாதியமைப்புக்கு அடித்தளமாக அமைந்திருப்பது சனாதனம் என்னும் மனுஸ்மிருதி அல்லது வருணாசிரம கோட்பாடே ஆகும். அதுவே இந்திய மக்களை ஆயிரக்கணக்கான சாதிக்குழுக்களாகப் பிரித்து, உயர்வு- தாழ்வைக் கற்பித்து நெடுங்காலமாக அதனை நிலைப்படுத்தியுள்ளது. இதனால் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் மிகமோசமான இழிவுகளுக்கும் வன்கொடுமைகளுக்கும் ஆளாகிவருகின்றனர். உலகின் வேறெந்த மூலையிலும் இல்லாத இத்தகைய சனாதன-சாதியமைப்பு முறையை எதிர்த்துக் கவுதம புத்தர் காலத்திலிருந்தே போராடிக்கொண்டிருக்கிறோம்.
புரட்சிகரமான அப்போராட்டக் களத்தில் இருபதாம் நூற்றாண்டின் எழுச்சிமிகு போராளிகளாக முன்னின்று எளிய மக்களை வழிநடத்திய மாமனிதர்களுள் புரட்சியாளர் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் ஆகிய இருவரும் முதன்மையானவர்கள் ஆவர்.
இத்தகு பெருமைக்குரிய தந்தை பெரியாரின் நினைவுநாளான இன்று, திசம்பர்-24இல், அவரது அளப்பரிய பங்களிப்பை நினைவுகூர்ந்து அவருக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டியது, ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் உரிய கடமையாகும். அத்தகைய கடமையுணர்வோடு தந்தை பெரியாருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
தந்தை பெரியர், தனது இறுதிமூச்சுவரையில் ஏறத்தாழ அரைநூற்றாண்டு காலம், சாதியவன்கொடுமைகளுக்குக் காரணமான சாதியமைப்பு முறையையும் அதற்கு அடிப்படைக் காரணியாகவுள்ள சனாதனம் என்னும் மனுதரும கோட்பாட்டையும் மூர்க்கமாக எதிர்த்துப் போராடியவர் ஆவார்.
சாதி ஒழிப்பிலிருந்தே சமத்துவத்தை வென்றெடுக்க முடியும் என்பதில் உறுதியாக இருந்தார். ஆகவேதான் சாதியமைப்பின் அடித்தளமான சனாதனத்தை வேரறுக்க வேண்டுமென்பதில் தீவிரம் காட்டி, நீண்ட நெடும்போரை சலிப்பின்றி நடத்தினார். அவர் வழியில் இன்னும் அந்த அறப்போரை நாம் தொடர வேண்டியுள்ளது.
சமூகநீதி என்னும் இடப்பங்கீடு உரிமைக்கான தொடர் போராட்டம்தான் தந்தை பெரியார் சனாதனத்துக்கு எதிராகக் கையாண்ட வலுவானதொரு அரசியல் ஆயுதமாகும். அந்த ஆயுதத்தை இன்னும் நமது தலைமுறையிலும் தொடர்ச்சியாகக் கையேந்த வேண்டிய தேவையுள்ளது.
இந்நிலையில், சனாதனமென்னும் பெருமலையைத் தகர்க்கும் உளியும் ஆப்பும் ஓங்கி அடிக்கும் சம்மட்டியும் சமூகநீதியே என்பதை உணர்ந்து அதனைக் கையேந்துவதுதான் தந்தை பெரியாருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். இதுவே சமத்துவத்துக்காகப் போராடும் ஒவ்வொருவரும் அவரது நினைவுநாளில் ஏற்கவேண்டிய உறுதிமொழியாகும். எனவே, சமூகநீதியை வென்றெடுப்போம்; சனாதனத்தை வேரறுப்போம் என இந்நாளில் உறுதியேற்போம்.’’