பெரம்பலூர் மாவட்டம், திருமாந்துறை சுங்கச்சாவடியில் வேலை செய்து வந்த 28 ஊழியர்கள் முன் அறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதன் காரணமாக சுங்கச்சாவடி ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களது போராட்டம் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பெரம்பலூர் மாவட்ட எல்லையில் உள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி மேற்பார்வையாளராக பணி செய்து வந்த ஆடுதுறை கிராமத்தைச் சேர்ந்த கோபால்(44), கடந்த மாதம் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சுங்கச்சாவடி மேலாளருக்கு தகவல் தெரிவிக்காமல் விடுமுறை எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து கோபாலை நான்கு நாட்கள் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை 5 மணிக்கு பணியில் சேர்வதற்காக கோபால் புறப்பட்டு சென்றுள்ளார். அப்போது கோபாலை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சுங்கச்சாவடி மேலாளர், வேறொரு அதிகாரியைச் சந்தித்து அனுமதி கேட்டு விட்டு வேலைக்கு வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக தன் மீது ஏதாவது நடவடிக்கை எடுத்து வேலைக்கு வர வேண்டாம் என்று கூறிவிடுவார்களோ என்று பயந்த கோபால், சுங்கச்சாவடி அருகில் உள்ள வெள்ளாறு பகுதிக்கு சென்று தன் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோபால் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுங்கச்சாவடி ஊழியர்களின் போராட்டம் நடந்து வரும் நிலையில், அதில் பணி செய்து வந்த ஊழியர் தற்கொலை செய்து கொண்டது தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த கோபாலுக்கு மனைவியும் ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு குழந்தைகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.