புதுச்சேரியில் விடுதலை கட்சியின் சார்பில் அமைப்பாய் திரள்வோம் என்ற கருத்தரங்கு கூட்டம் லால் பகதூர் சாஸ்திரி சாலையில் உள்ள தனியார் (ஆனந்தா இன்) ஹோட்டலில் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் பொது செயலாளர் தொல் திருமாவளவன் கலந்துகொண்டார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது,
புதுச்சேரியில் டிஜிட்டல் பேனர் வைப்பதற்கு தடை விதித்து இருப்பது ஜனநாயக விதிமுறைகளுக்கு மீறிய செயல். ஆளுநரே டிஜிட்டல் பேனரை தடுப்பது புதுச்சேரி அரசை அவமதிக்கும் செயல். இது ஆளுநரின் அதிகார வரம்பு மீறல். இது வன்மையாக கண்டிக்கதக்கது.
தமிழகத்தில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக அறப்போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி மிக வன்மையான கண்டிக்கின்றது.
நாட்டிற்கான வளர்ச்சி என்று கூறி 8 வழி பசுமைச் சாலை திட்டம் மக்களின் கருத்தை கேட்காமல் மத்திய, மாநில அரசுகள் ஏன் அவசரம் காட்டுகின்றது. பசுமை வழி சாலைத் திட்டத்தை கண்டித்து ஜுலை 20ல் சேலத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்.
தமிழக மக்களை காயப்படுத்தும் வகையில் மத்திய அரசு சிங்கள அதிகாரிகளை தமிழகத்தில் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்திருப்பது தமிழர் விரோதச்செயல். இதுகுறித்து கலந்தாலோசித்து போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும். கோவையில் குடிநீர் வினியோகம் தனியார் நிறுவனத்திடம் கொடுத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதை தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.