திருச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் அமமுக வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது இன்ஸ்பெக்டர் காளியப்பன் உள்ளிட்ட பல போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த திமுக மாஜி நகரத் துணைச் செயலாளர் சுப்பையா ( வயது 70) அருகில் நின்றவர்களிடம் நேற்று காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திருநாவுக்கரசர் இதே பகுதியில் பிரசாரம் செய்தபோது பாதுகாப்புக்கு ஒரு போலிசார் கூட வரவில்லை ஆனால் இன்று சாருபாலா தொண்டைமான் பிரசாரத்துக்கு இத்தனை பாதுகாப்பு என்று சொல்லிக் கொண்டிருந்த போது அருகில் நின்ற இன்ஸ்பெக்டர் காளியப்பன் முதியவர் என்றும் பார்க்காமல் சுப்பையாவை பளார் பளார் என்று அறைய அடிதாங்க முடியாமல் சுப்பையா சுருண்டு விழுந்தார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப் பகுதியில் நின்ற திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினரும் பொதுமக்களும் போலிசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் தொடங்கியதும் போலிசார் அங்கிருந்து சென்றுவிட்டனர். அதனால் இரவு 10.30 மணியை கடந்தும் சுமார் 3 மணி நேரம் சாலை மறியல் நடந்தது. இதனால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் மாவட்ட எஸ் பி செல்வராஜ் சாலை மறியலை கைவிடவும் சமாதானம் செய்யவும் போலிசாரை அனுப்பிய நிலையில் தற்போது போராட்டம் கைவிடப்பட்டது.