Skip to main content

தலைவர், துணை தலைவர் பதவிக்கு மூன்றாவது முறையாக மறைமுக தேர்தல்!

Published on 28/02/2020 | Edited on 28/02/2020

தமிழகத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் பெரும்பாலான இடங்களில் நடைபெற்றது. இத்தேர்தல் சில இடங்களில் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது முறையாகவும் பல ஊர்களில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது மூன்றாவது முறையாக ஊரக உள்ளாட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மார்ச் 4ஆம் தேதி அந்த தேர்தல் நடைபெற உள்ளது.

 

Third time indirect local body elections in Erode

 



ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி இரண்டாவது முறையாக நடந்த மறைமுக தேர்தலில் ஈரோடு மற்றும் தூக்கநாயக்கன்பாளையம் யூனியன் தலைவர் , துணைத் தலைவர் பதவிக்கும் சென்னிமலை யூனியன் கொடுமணல், புஞ்சை பாலத் தொழுவு பஞ்சாயத்து துணைத்தலைவர் பதவிக்கும் மறைமுகத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து  ஜனவரி 30-ஆம் தேதி இரண்டாவது முறையாக நடந்த தேர்தலில் கொடுமணல் புஞ்சை பாலத் தொழுவுபஞ்சாயத்து துணை தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஈரோடு யூனியனில் அதிமுக -  திமுகவில் தலா மூன்று பேர் சமநிலையில் இருக்கும் நிலையில் நடந்த தேர்தலில் ஏற்கனவே கடத்தப்பட்ட அதிமுக கவுன்சிலர்கள் மூன்று பேரும் வராத காரணத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் தூக்கநாயக்கன்பாளையம் யூனியனில் நடந்த தேர்தலில் திமுக 6 இடம், காங்கிரஸ் ஒரு இடம், அதிமுக மூன்று இடம் என வெற்றி பெற்று கவுன்சிலர்கள் உள்ள நிலையில் திமுக கவுன்சிலர்கள் வாக்களிக்க வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் மார்ச் 4 ஆம் தேதி மூன்றாம் முறையாக  ஈரோடு மற்றும் டி.என்.பாளையம் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கான  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று காலை 10.30  மணிக்கு அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. அன்று  மதியம் 3 மணியளவில் துணைத் தலைவர் பதவிக்கான  தேர்தல் நடைபெற உள்ளது.  தலைவர், துணைத் தலைவர் பதவியைப் பிடிக்க அதிமுக - திமுக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இதேபோல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பல ஊர்களில் திமுக மற்றும் அதிமுகவுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது இந்நிலையில் மூன்றாவது முறையாகவும்  தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், நான்காவது தேர்தலில் அப்போது வருகிற உறுப்பினர்களை கொண்டு தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

 

 

சார்ந்த செய்திகள்