சேலத்தில் இரண்டு அடுக்கு மேம்பாலம் திறப்பு விழா நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மாலை விமானம் மூலம் கோவை வந்தார். பிறகு கார் மூலம் சேலத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்றார். நேற்று இரவு அவரது வீட்டில் தங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது உறவினர்கள் பலரும் வந்து சந்தித்தனர்.
![e](http://image.nakkheeran.in/cdn/farfuture/nSs_-W8eJDnixVJN7r4ZBMm2oJlS5N_LMxaGwSTY8fU/1559901167/sites/default/files/inline-images/eps_93.jpg)
அப்போது தனது சொந்த பந்தங்களிடம் மனம் விட்டு பேசிய முதல்வர் எடப்பாடி, ஆட்சியின் தற்போதைய நிலை.. இதன் எதிர்காலம், உள் கட்சியில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம், துணை முதலமைச்சர் ஓபிஎஸ் நெருக்கடி என பல விஷயங்களை நீண்ட நேரம் உறவுகளிடம் மனம் விட்டுப் பேசியுள்ளார். அதன் பிறகு இன்று காலை 10 மணிக்கு சேலம் அரசு நிகழ்ச்சிக்கு புறப்பட்டார். அப்போது முதல்வர் பழனிச்சாமிக்கு போலீஸ் மூலம் ஒரு தகவல் போய் சேர்ந்தது. அந்த தகவல் மேம்பாலம் திறப்பு திறப்புவிழாவில் திமுக எம். பி மற்றும் எம்எல்ஏக்கள் கலந்து கொள்ள வருகிறார்கள் என்பதுதான். இதைக் கேட்ட முதல்வர் எடப்பாடி கொஞ்சம் ஷாக் ஆனார். வேறு வழி இல்லாமல் மேம்பாலம் திறப்பு விழாவிற்கு கடுகடுப்புடன் சென்றார்.
நிகழ்ச்சி தொடங்கியதும் பொதுவாக இங்கு கலந்து கொண்டுள்ள சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வரவேற்பதாக முதல்வர் பழனிச்சாமி கூற, அந்த நேரத்தில் அதிகாரிகள் தரப்பில் இருந்து ஒரு பேப்பர் கொடுக்கப்பட்டது. அதில் அந்த தொகுதியின் எம்பி, எம்எல்ஏக்கள் பெயரும் இருந்தது. அதைப் பார்த்து மேலும் கடுப்பான முதல்வர் எடப்பாடி வேறு வழியே இல்லாமல் திமுக எம்.பி எஸ். ஆர். பார்த்திபன் மற்றும் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆகியோரின் பெயரை உச்சரித்தார். அப்போது திமுகவினர் கோரசாக கைதட்டி மகிழ்ந்தனர். அதன்பிறகு நிகழ்ச்சியில் வழக்கமாக திமுகவை சாடி பேசும் எடப்பாடி பழனிச்சாமி இந்த நிகழ்ச்சியில் அரசு திட்டத்தை மட்டும் கூறிவிட்டு சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு அதிகாரிகளை அழைத்து, எதற்காக திமுக எம்பி, எம்எல்ஏக்கள் பெயரை கொடுத்து உச்சரிக்க சொன்னீர்கள் எனக் கேட்க, இது அரசின் நிகழ்ச்சி அதில் கலந்துகொள்ள அவர்கள் வந்துள்ளார்கள். அவர்கள் பெயரை கூறி வரவேற்கவில்லை என்றால் தேவையில்லாமல் குழப்பமும் சலசலப்பும் ஏற்படுமென காவல்துறை கூறியதால் நாங்கள் அந்த துண்டு சீட்டை கொடுத்தோம் என கூறினார்கள் . இதைக் கேட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்னோட சொந்த ஊரிலேயே என்ன நோக வைக்கிறார்களே என மனம் வெதும்பி அங்கிருந்து கிளம்பி உள்ளார் .
திமுகவினர் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு "இனிமேல் எல்லாமே இப்படித்தான்" எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும் திமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கலந்து கொள்வோம் என்றனர்.