
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், பரப்புரை போன்ற பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக இயங்கிவருவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் தேர்தல் பிரச்சாரம், வேட்புமனு தாக்கல் என இயங்கி வருகிறது.
இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், ''எனக்கு 2, 3 ஆண்டுகளாக இடையூறு செய்து வருகிறார்கள். அரசு பணத்தில் ஹெலிகாப்டரில் செல்லவில்லை, எனது சொந்த பணத்தில் செல்கிறேன்'' என்றார்.
கடந்த 14/03/2021ஆம் தேதியன்று, காஞ்சிபுரத்தில் கமல்ஹாசன் தன் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு தங்கும் விடுதிக்கு சென்றுக்கொண்டிருந்த நிலையில், காந்தி சாலை அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கமல்ஹாசனின் காரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.