சென்னையில் உள்ள பிரபல தனியார் வணிக வளாகத்தில் அரசின் டாஸ்மாக் கடையில் தன்னிச்சையாக இயங்கும் மது பாட்டில் விற்பனை இயந்திரம் சில நாட்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டிற்கு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சியினரும் தங்களது கண்டனங்களை முன்வைத்தனர்.
இந்நிலையில் இன்று மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த வணிக வளாகத்தில் ஆய்வு செய்துவிட்டு அங்கேயே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு அரசு இந்த டாஸ்மாக் வருமானத்தை கொண்டு நடப்பதைபோல ஒரு தோற்றத்தை செய்தியாக வெளியிடுவது மிகவும் வேதனைக்குரியது. நிர்வாகத் திறமை இல்லாத சூழலை உருவாக்கிக்கொள்வதுபோல் நீங்களாக உருவாக்கிக்கொள்கிறீர்கள். செய்திகளை வெளியிடும் ஊடகங்களும், பத்திரிகைகளும் என்ன உண்மையில் நடந்திருக்கிறது. கடந்த ஆட்சியில் என்ன நடந்து முடிந்திருக்கிறது. வெவ்வேறு மாநிலங்களில் எப்படி இருக்கிறது எனும் உண்மைத் தன்மையை அறியாமல்; எந்த சூழலில் இருக்கிறது என்பது தெரியாமல் உங்களுக்குள் நிர்வாகத்தின் மீது தொழில் ரீதியாக இருக்கும் போட்டியில், செய்தியை முந்தி வெளியிட வேண்டும் எனும் ஆர்வத்தில் உண்மை தன்மை அறியாமல் செய்திகளை வெளியிடுவதுதான் வருத்தத்திற்குரியது. போட்டியில் உண்மை செய்திகளை வெளியிட்டால் ஏற்புடையதாக இருக்கும்.
நீங்கள் வெளியிடும் செய்திகளின் உண்மைத் தன்மையை அறியாமல் சில அரசியல் எதிர்க்கட்சிகள், அரசின் மீது குற்றச்சாட்டுகளை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், அரசின் மீது உள்ள காழ்புணர்ச்சியின் காரணமாக அரசு மீது குறை சொல்ல முடியாமல், நீங்கள் வெளியிடும் செய்திகளை ஆதரமாக வைத்துக்கொண்டு அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்.
நீங்கள் அனைவரும் தற்போது இந்த மால் ஷாப்-ஐ பார்த்தீர்கள். யாராவது ஏ.டி.எம். மிஷின் போல் வெளியே இருந்து உபயோகிக்க முடியுமா? இந்த தானியங்கி மிஷின், கடைக்குள் வைக்கப்பட்டுள்ளது. கடை காலை 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். இந்த மால் ஷாப்பில் யாராவது 21 வயதுக்குள் இருக்கும் மாணவர்களோ சிறுவர்களோ கடைக்குள் இருக்கும் இந்த தானியங்கி மிஷினில் இருந்து எடுக்க முடியுமா? கடையின் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரின் முன்னிலையில் தான் அந்த மிஷினை உபயோகிக்கவே முடியும்” என்று தெரிவித்தார்.