இன்று நாட்டின் 77 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டின் பல இடங்களிலும் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் கொடியேற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. அதேபோல் தமிழக அரசு சார்பிலும் கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்ட அவர், சாதனையாளர்களுக்கு விருதுகளையும் வழங்கினார்.
தமிழ்நாட்டில் முதல் பெண்ணாக எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்த முத்தமிழ் செல்விக்கு கல்பனா சாவ்லா விருது அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தமிழ்செல்வி பேசுகையில், ''என்னுடைய தைரியத்தை பாராட்டி கல்பனா சாவ்லா விருது வழங்கியுள்ளார்கள். இந்த சாதனை என்னவென்றால் தமிழ்நாட்டில் இருந்து முதல் பெண்ணாக எவரெஸ்டில் ஏறி சாதனை புரிந்திருக்கிறேன். இந்த சாதனைக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாடு முதல்வர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. காரணம் இந்த சாதனைக்காக மிகவும் கஷ்டப்பட்டுள்ளேன். தமிழ்நாட்டுக்கு இந்த சாதனை தெரியப்படவில்லை என இருந்தேன். ஆனால் இந்த விருதை கொடுத்து தமிழ்நாட்டுக்கே தெரிய வைத்து விட்டார்கள். இதற்காகவே நன்றி'' என்றார்.