தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கம்பம் வடக்கு நகரச் செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு நகரச் செயலாளர் செல்வக்குமார் வரவேற்றார். மாநில தீர்மானக்குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பாண்டியன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கம்பம் இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.
இதனையடுத்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, ''கடந்த ஆட்சியில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். மின்சார வாரியத்தில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் கடன். அந்தக் கடனை இன்றைக்கு இந்த அரசு சுமக்கிறது. ஆறு லட்சம் கோடியில் ஒன்றரை லட்சம் கோடி மின்சாரத் துறைக்கு மட்டும். தமிழகத்தில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி மன்றங்கள் இருக்கிறது என்றால் யாருமே கரண்ட் பில் கட்டுவது கிடையாது. இதெல்லாம் சேர்த்தால் ஆயிரக்கணக்கான கோடி வரும். அரசாங்கம்தான் கட்டுகிறது. எல்லாரும் மொத்தமாக யாரிடம் வந்து நிற்க வேண்டும் என்றால் முதலமைச்சர் முன்னாடிதான் நிற்க வேண்டும். அவர்தான் முடிவெடுக்க வேண்டியவர்.
பொங்கல் தொகுப்பு பற்றி கூடச் சொன்னார்கள். விரைவில், அநேகமாகத் திங்கட்கிழமை காலையில் நம்முடைய முதல்வர் நிச்சயம் அறிவிப்பார். எடப்பாடி ஆட்சியை விட்டுப் போகும்போது விவசாயக் கடன் தள்ளுபடி 12,420 கோடி அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டார். இப்பொழுது நமது முதலமைச்சர்தான் பாவம் அதை கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதுவரைக்கும் 5,000 கோடி கொடுத்துள்ளார்கள். இனி வருஷம் வருஷம் கொடுப்பார்கள். நாலு வருஷம் மொத்தமாகச் சேர்ந்து வட்டியும் முதலுமாக கட்டும் பொறுப்பு நம்ம முதல்வருக்குத்தான் இருக்கிறது. அவர்கள் அறிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
விவசாயம் பண்ணாதவர்களுக்கு எல்லாம் கடன் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். ஒன்றை மட்டும் விவசாயிகள் மறந்து விடக்கூடாது ஒன்னே கால் லட்சம் பேருக்கு கரண்ட் கூப்பிட்டுக் கூப்பிட்டுக் கொடுத்தோம். இது ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசு. மகளிர் மேம்பாட்டுத் துறையை இன்றைக்கு வருங்கால, எதிர்கால தமிழகத்தை வழி நடத்த இருக்கின்ற உதயநிதி ஸ்டாலின் இன்று ஏற்றிருக்கிறார். அப்பாவைப் போல ஏற்றிருக்கிறார். உங்களுக்கே தெரியும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஒரு பொற்காலம் துணை முதல்வராக ஸ்டாலின் இருந்த காலம்'' எனப் பேசினார்.