Skip to main content

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது காலணியால் தாக்குதல்; திருவள்ளூரில் பரபரப்பு

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

They broke into the school and threw shoes at the teacher; There is excitement in Tiruvallur

 

திருவள்ளூரில் பள்ளி ஒன்றில் மாணவனை ஆசிரியர் பிரம்பால் அடித்ததாக மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து தற்காலிக ஆசிரியரைக் காலணியால் தாக்கியது தொடர்பான வீடியோ காட்சிகள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

திருவள்ளூர் மாவட்டம் குருவராஜகண்டிகையில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர் ஒருவரைத் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் பிரம்பால் அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மாணவர் ஹரிஹரனின் கை, கால்களில் வீக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் பள்ளி நிர்வாகம் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் வீட்டிற்கும் அனுப்பி வைக்காமல் ஒத்தடம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. வீட்டில் சொன்னால் பள்ளியை விட்டு நிறுத்தி விடுவதாக ஆசிரியர் தரப்பில் மாணவரிடம் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டுக்குச் சென்ற மாணவனின் கை, கால்களில் வீக்கம் இருப்பதைக் கண்டு பெற்றோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

 

இதுதொடர்பாகப் பள்ளியில் விசாரிக்க உறவினர்கள் மற்றும் பெற்றோர் சென்றுள்ளனர். அப்பொழுது ஆசிரியர் பிரம்பால் அடித்தது தெரியவந்த நிலையில், ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் ஒன்றாகச் சேர்ந்து, தற்காலிக ஆசிரியர் மோகன் பாபுவை சரமாரியாகக் காலணியால் தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தற்பொழுது மாணவனின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் ஒன்றாகச் சேர்ந்து பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியரைத் தாக்கும் அந்த பரபரப்பு காட்சி வைரலான நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்