மதுரையைச் சேர்ந்த ஜெயக்கொடி என்பவர் திருச்சி பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவர் பேசுகையில், “என்னுடைய மகன் வெள்ளகாளி என்ற காளிமுத்து (வயது 36). அவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் ஒரு குற்ற வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையிலிருந்து வருகிறார். இந்நிலையில் காவல்துறையினர் போலியாக என் மகனை என்கவுண்டர் செய்ய இருப்பதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. சென்ற வாரம் சிறையில் செல்போன் பயன்படுத்துவதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி என் மகனுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள்.
அதேபோல் அடிக்கடி என் மகனை வெளி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள். சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லும்போது தப்ப முயன்றதாகவும் வேறு வழியில்லாமல் காவல்துறையினர் என்கவுண்டர் செய்ததாக வழக்கை முடிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே நாங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும், நீதிமன்றத்தையும் மதித்து நடக்கின்றோம். ஆனால் காவல்துறையினர் சிலர் ஸ்ரீபெரும்புதூரில் கிளாய் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி விஷ்வாவை போலியாக என்கவுண்டர் செய்தது போல, என் மகனை போலியாக என்கவுண்டர் செய்ய திட்டமிட்டு உள்ளனர். குறிப்பாக எதிரிகளிடமிருந்து காவல்துறையினர் பெரும் தொகையை பெற்றுக்கொண்டு என் மகனை என்கவுண்டர் செய்ய உள்ளதாகத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. எனவே என் மகனின் உயிருக்கு ஏதாவது விபரீதம் ஏற்பட்டால் முழுக்க முழுக்க காவல்துறையும், சிறைக் காவல்துறையும் முழு பொறுப்பு. எனது மகன் உயிரை காப்பாற்ற உதவி செய்யுங்கள்'' எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.