வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பியாக இருக்கக்கூடியவர் திமுகவைச் சேர்ந்த கதிர் ஆனந்த். இவர் 2019 தேர்தலில் வெற்றிபெற்று வேலூர் எம்.பியானார். கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்ற அதிருப்தி தொகுதி மக்களிடையே இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், வேலூர் மாநகர் முழுவதும் முக்கிய இடங்களில், சாலை ஓரச் சுவர்களில், பொது இடங்களில் ‘எங்க தொகுதி எம்.பி. எங்கேயும் காணவில்லை. கண்டா வரச் சொல்லுங்க. இங்ஙனம் வேலூர் நாடாளுமன்றத் தொகுதி மக்கள்’ என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தி.மு.கவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியிலும் 38 தொகுதிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் எம்பிக்களாக உள்ளனர். இன்னும் இரண்டு மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுமக்களின் பெயரில் இப்படி ஒரு போஸ்டரை அனைத்து தொகுதிகளிலும் ஒட்டி தேர்தல் பணி தொடங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.