Skip to main content

“உயர்கல்வியில் சிறந்து விளங்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
There should be excellence in higher education says CM MK Stalin 

தமிழகத்தில் 2023 - 24 ஆம் கல்வியாண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (06.05.2024) காலை 09.30 மணிக்கு வெளியானது. தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா தேர்வு முடிவுகளை வெளியிட்டார். மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in இணையதள முகவரியில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து வருகின்றனர். அதே சமயம் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவ - மாணவிகள் வீட்டில் இருந்தபடியே தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏதுவாக பள்ளிகளில் பதிவு செய்திருந்த கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண் விவரம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

வெளியான தேர்வு முடிவுகளின் படி, தமிழ்நாட்டில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 890 மாணவிகளும், 3 லட்சத்து 25 ஆயிரத்து 305 மாணவர்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 7 ஆயிரத்து 532 பள்ளிகளில் 2 ஆயிரத்து 478 மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. அதில் 397 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. 

There should be excellence in higher education says CM MK Stalin 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மொத்த தேர்ச்சி விகிதம் 94.56% ஆகும். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 91.32 சதவீதம் ஆகும். அரசு உதவி பெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 95.49 சதவீதம் ஆகும். தனியார் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 96.70 ஆகும். இருபாலர் படிக்கும் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 94.70 சதவீதம் ஆகும். மகளிர் பள்ளிகள் 96.39 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. ஆண்கள் பள்ளி 86.96 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த கல்வி ஆண்டில் 94.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு தேர்ச்சி 94.56% விகிதம் அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வில் மாணவிகள் 96.44% பேரும் மாணவர்கள் 92.37% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவியர் 4.07% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டம் 97.45% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளன. 97.42% தேர்ச்சி பெற்று ஈரோடு, சிவகங்கை மாவட்டங்கள் 2 ஆம் இடம் பெற்றுள்ளது. 97.25% தேர்ச்சி பெற்று அரியலூர் மாவட்டம் 3 ஆம் இடம் பிடித்துள்ளது. 90.47% தேர்ச்சி பெற்று திருவண்ணாமலை கடைசி இடம் பிடித்துள்ளது. 

There should be excellence in higher education says CM MK Stalin 

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “பள்ளிக்கல்வியை நிறைவுசெய்து, கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்! உயர்கல்வியில் சிறந்து விளங்கி, தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும்!. இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம். அடுத்து காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கான துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்!” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்