
கடந்த சில தினங்களாக அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. மேலும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்திற்கும் தேவையான மருந்துகள் இருப்பில் இல்லை எனவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், “Iv fluids மருந்துகள் சிறிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டது உண்மை. அதற்கு காரணமாக அமைந்தது உக்ரைன் போரினால் பெட்ரோலிய மூலப்பொருட்களின் விலை ஏற்றம். அதன் காரணமாக இந்த மருந்துகள் அடைக்கப்படும் பாட்டில்களின் தட்டுப்பாடு போன்ற பல்வேறு விசயங்களினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டது.
இருந்த போதிலும் தமிழக அரசு மற்றும் தமிழக மருத்துவ பணிகள் கழகம் உடனடியாக மாற்று ஏற்பாடுகளின் மூலம் அனைத்து இடங்களிலும் தட்டுப்பாடு ஆன மருந்துகளை கிடைக்க ஏற்பாடு செய்தது.
327 வகையான அத்தியவசிய மருந்துகள் மற்றும் 301 வகையான சிறப்பு மருந்துகள் என இரு வகை மருந்துகள் தமிழகத்தில் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில் சிறப்பு மருந்துகள் மருத்துவமனைகளின் தேவைக்கேற்ப மட்டுமே கொள்முதல் செய்யப்படும். இந்த சிறப்பு மருந்துகளுக்கும் எந்த இடங்களிலும் தட்டுப்பாட்டில் இல்லை.
தமிழகத்திற்கு தேவையான 327 வகையான அத்தியாவசிய மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அண்மையில் வெளிவந்த மற்றொரு செய்தி மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்திற்கு தேவைப்படும் 32 மருந்துகள் போதுமான அளவு இல்லை என செய்தி வெளிவந்தது. அந்த திட்டத்திற்கும் 3 முதல் 4 மாதங்களுக்கு தேவைப்படும் 32 வகையான மருந்துகள் அந்தந்த மாவட்டங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
தமிழ் நாடு முழுவதிலும் எந்த மாவட்டத்தில் தட்டுப்பாடு என யார் கருதினாலும் அந்த மாவட்டத்து மருந்து கிடங்கில் ஆய்வு செய்வதற்கு உங்களுக்கு தாராளமாக அனுமதி வழங்கப்படும். நீங்களே வந்து சம்பந்தப்பட்ட மருந்துகள் இருக்கின்றனவா என தெரிந்து கொண்டு செய்திகளை வெளியிடலாம். இல்லையெனினும் மக்கள் 104 என்ற எண்ணிற்கு தொலைபேசி செய்து புகாரளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் கூறினார்.